ரயில் டிக்கெட் கட்டணம் உயர்கிறது! ரயில்வே வாரிய தலைவர் தகவல்…

டெல்லி: ரயில் டிக்கெட் கட்டணம், பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாகவும், ரெயில் நிலையங்களை சுத்தமாக வைக்கவும், பராமரிக்கவும் கட்டணங்கள் வசூலிக்கவும் திட்டமிட்டு உள்ளதாக ரெயில்வே வாரிய தலைவர் வினோத்குமார் யாதவ் தெரிவித்து உள்ளார்.

கொரோனா முடக்கம் காரணமாக கடந்த 5 மாதங்களாக பயணிகள் ரயில்சேவை முடங்கி உள்ள நிலையில், சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த,  ரயில்வே வாரிய தலைவர் யாதவ் பிரசாத்,  முக்கிய ரெயில் நிலையங்களை பயணிகள் நலன் கருதி, சுத்தமாக வைக்கவும், பராமரிக்கவும், ரெயில் நிலையங்களின் மறு வளர்ச்சிக்காக கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் கட்டணம் மூலம், ரயில் . நிலையம் முழுவதும் பயணிகளுக்கு சிறப்பான வசதிகள் செய்து கொடுக்க இது உதவும். பயணிகளுக்கு உலகத் தரமான வசதிகளை ரெயில்வே கொடுப்பதற்கு இது பயன் உள்ளதாக அமையும், ஆனால், இது பயணிகளை பாதிக்கிற வகையில் இருக்காது,  இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றார்.

ரயில் பயணக் கட்டணம் சிறிதளவில் உயர்த்த உள்ளதாகவும், இது, ரயிலில் பயணம் செய்யும் பயணிகள், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டியதிருப்பதால், இந்த கட்டண உயர்வு இருக்கும், பிளாட்பார டிக்கெட் கட்டணமும் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும்,  இந்தியன் ரெயில்வே துறையில் 7 ஆயிரம் ரயில் நிலையங்கள் இருப்பதாகவும், இதில் முக்கியமான  15 சதவீத ரெயில் நிலையங்களில் மட்டுமே, இந்த பராமரிப்பு கட்டணம் வசூலிக்க முடிவு செய்து உள்ளதாகவும், குறைந்த பட்சம்  300 முதல் அதிகபட்சமாக  1000 ரயில் நிலை யங்களில் மட்டும் இந்த  உபயோக கட்டணம் வசூலிக்க திட்டமிட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.