ஊரடங்கால் அல்லல்படும் புலம்பெயர் தொழிலாளர்களின் கண்ணீர் வீடியோக்கள்… மத்தியஅரசு கவனிக்குமா?

கொரோனா ஊரடங்கால் வெளிமாநிலங்களில் சிக்கிய புலம்பெயர் தொழிலாளர்கள், உண்ண உணவு கிடைக்காமல் கடுமையான கொடுமைக்கு ஆளான நிலையில், கண்ணீருடன் தங்களது சொந்த ஊர்களை நோக்கி நடந்துசெல்லத் தொடங்கி உள்ளனர்.

ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் தங்களது சொந்த ஊர்களை நோக்கி, சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிலோ மீட்டர் தூரத்தை நடந்தே, காலில் செருப்புகள் இன்றி கண்ணீரோடு நடந்து செல்லும் அவலங்கள் அரங்கேறி உள்ளது.

பலர் சாலை மார்க்கமாகவும், ஏராளமானோர் ரயில்வே தண்டவாளங்கள் வழியாகவும் தங்களது சொந்த ஊர்களை நோக்கி கவலை தோய்ந்த முக்கத்துடன் செல்லும் காட்சியை காண்போரின்  கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது..

மோடி தலைமையிலான மத்தியஅரசின் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தாலும், மாநில அரசுகளின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளாலும் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள்  கண்ணீரோடு, தங்களது கைக்குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரோடு  தங்களது சொந்த ஊர்களை நோக்கி நகர்ந்து வருகிறார்கள்…

மத்திய மாநில அரசுகள் மீது  அவர்கள் பொறுமையையும் நம்பிக்கையையும் இழந்துவிட்டார்கள்.

கடந்த 48 மணி நேரத்திற்குள் சாலை மார்க்கமாக சென்றுகொண்டிருக்கும் புலம்பெயர் மக்களிடம் செய்தியாளர்கள், அவர்கள் நடந்து செல்வது குறித்து கேள்வி எழுப்பினர், அதற்கு பதில் அளித்த பெரும்பாலோர் மோடி அரசை கடுமையாக சாடியதுடன்,

நாங்கள் இங்கு பசியால் துன்பப்படுகிறோம், ஆனால், அவர் (மோடி) அங்கே வசதியாக அமர்ந்திருக்கிறார்.. ஏழைகளுக்கு அவர் ஏதும் செய்யவில்லை…? ”

ஆனால், 50 நாட்களுக்கு பிறகு, தற்போது உணவுப்பொருட்கள் தருவதாக அரசு அறிவித்து உள்ளது… இது ஒரு கொடூரமான நகைச்சுவை என்று கண்ணீரோடு கூறியவர்கள்,   “நாங்கள் எங்கள் குழந்தைகளுடன் நடப்போம், அதில் நாங்கள் இறந்தாலும் பரவாயில்லை… தற்போது  நாங்கள் பெரும் சிக்கலில் இருக்கிறோம் என்று  கண்ணீரோடு கூறுகின்றனர்…