பெய்ஜிங்:

அதிகார துஷ்பிரயோகம் செய்து லஞ்சம் பெற்ற வழக்கில், சீனாவை சேர்ந்த முன்னாள் இன்டர்போல் தலைவர் மெங்க் ஹாங்வி நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.


பிரான்ஸை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச போலீஸ் எனப்படும் இன்டெர்போல் தலைவராக மெங்க் ஹோங்வி நியமிக்கப்பட்டார்.

சீனாவிலிருந்து இன்டெர்போல் தலைவராக நியமிக்கப்பட்ட முதல் நபர் இவர்.
இந்த பதவியில் நியமிக்கப்படும் முன்பு மெங்க் ஹோங்வி சீன பொது பாதுகாப்பு துணை அமைச்சராகவும் இருந்தார்.

இந்த பதவியில் இருந்தபோது, அதிகாரம் துஷ்பிரயோகம் செய்து 2.09 மில்லியன் டாலர் அளவுக்கு பணமாகவும், பரிசுப் பொருட்களாகவும் லஞ்சம் பெற்றதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தபின் செப்டம்பர் மாதம் முதல் காணாமல் போன அவர், வியாழன்று சீன நீதிமன்றத்தில் ஆஜாரானார்.

தன் மீதான ஊழல் குற்றச்சாட்டை அவர் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார். இதனையடுத்து. இந்த வழக்கு மீதான தீர்ப்பை நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

இதற்கிடையே, பிரான்ஸில் தஞ்சம் புகுந்துள்ள மெங்க்கின் மனைவி, தன் கணவர் மீதான வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என கூறியுள்ளார்.

மெங்க் ஹோங்விக்கு எதிரான விசாரணை மற்றும் லஞ்சம் பெற்றது, விதி மீறல்கள் ஆகியவை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சீனாவின் பொது பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் ஜவோ கெழி கூறும்போது, கட்சியின் நடத்தையை மேம்படுத்தும் விதமாகவும், நேர்மையான நிர்வாகம், ஊழலுக்கு எதிரான நிலை என்ற அளவில் பொது பாதுகாப்பு அமைச்சக நடவடிக்கை மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் கெங் சுவாங் கூறும்போது, மெங்க் மனைவி கிரேஸ் மெங்கிற்கு பிரான்ஸ் தஞ்சம் அளித்ததை கடுமையாக விமர்சித்தார்.

பிரான்ஸின் தஞ்சம் அடைய கிரேஸ் விண்ணப்பித்திருந்தால், அது பிரான்ஸ் சட்ட விதிமுறையை தவறாகப் பயன்படுத்தியதாக கருதப்படும் என்றார்.