எங்க கூட்டணிக்கு வாங்க…! காங்கிரசுக்கு அழைப்பு விடுத்த கமல்ஹாசன்…

சென்னை: திமுக காங்கிரஸ் கட்சிகள் இடையே தொகுதி ஒதுக்கீட்டில் இழுபறி நீடித்து வரும் நிலையில், எங்க கூட்டணிக்கு வாங்க என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன்  காங்கிரசுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு போன்ற அரசியல் பேரங்கள் நடைபெற்று வருகின்றன. திமுக தலைமையிலான கூட்டணியிலும், அதிமுக தலைமையிலான கூட்டணியிலும் சில கட்சிகளிடையே தொகுதி ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறத.

திமுக தலைமையிலான கூட்டணியில், இதுவரை, மனித நேய மக்கள் கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (3), விடுதலை சிறுத்தைகள் (6), இந்திய கம்யூனிஸ்ட் (6) கட்சிகளுக்கு தொகுதிகள் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால்,  காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடனான தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தை இழுபறி நீடித்து வருகிறது.

திமுக தலமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுகவிற்கு அடுத்த பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சி குறைந்தபட்சம்  30 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும் என மல்லுகட்டி வருகிறது. ஆனல், திமுக தலைமை அதிகபட்சமாக  20 முதல் 23 தொகுதிகளை மட்டுமே கொடுக்க முடியும் என முரண்டுபிடித்து வருகிறது. 8ம் தேதிக்குள் தொகுதி பங்கீட்டை முடித்துக் கொள்ள வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின், கூட்டணி கட்சிகளுக்கு உத்தரவை பிறப்பித்துள்ளார் இதனால், காங்கிரஸ் – திமுக இடையே இழுபறி நீடித்து வருகிறது.

இதற்கிடையில், காங்கிரஸ் கட்சி சார்பில், கட்சியின் முக்கிய உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் தலைமையிலான செயற்குழு  கூட்டம் நடத்தப்பட்டது. அதில், அவர்களுடைய கருத்துக்களை தனித்தனியாக கேட்கப்பட்டது. இந்த  செயற்குழு கூட்டத்தில் பேசி மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி, திமுக மீதான அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன், திமுக தற்போது பேச்சுவார்த்தைக்கு எந்தவிதமான அழைப்பும் விடுக்க வில்லை என்று கூறியபோது கண்ணீர் விட்டார், இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் , காங்கிரஸ் கட்சி தரப்பில் நேர்காணலும் நடைபெற்று வருகிறது. திருநாவுக்கரசர், இளங்கோவன், தங்கபாலு, ஜெயக்குமார், செல்லக்குமார் ஆகியோர் தலைமையில் 5 குழுக்கள் நேர்காணலை நடத்தியது. நாளை பிற்பகல் வரை நேர்காணல் நடக்கிறது. கூட்டணி, தொகுதிகள் எதுவும் உறுதியாகாமல் இருப்பதால் அனைத்து தொகுதிகளுக்கும் நேர்காணல் நடத்தி பட்டியல் தயாரித்து தயார் நிலையில் வைக்க திட்டமிட்டு இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில், தங்களது கூட்டணியில் வந்து சேருங்கள் என தமிழக காங்கிரசுக்கு மக்கள் நீதி மய்யம் அழைப்பு விடுத்துள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் – மக்கள் நீதி மய்யம் கூட்டணி இடையே மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கமல் தற்போது வெளிப்படையாகவே காங்கிரசுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

‘இன்று செய்தியாளர்களிடம் பேசிய  மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் குமரவேல் , “காங்கிரஸ் கட்சி எங்கள் தலைமயிலான  மூன்றாவது கூட்டணிக்கு வந்தால் போதுமான  தொகுதிகள் ஒதுக்கப்படும்” என்று அழைப்பு விடுத்தார்.