டில்லி:

மேற்கு டில்லியை சேர்ந்த அன்கித் சக்சேனா என்ற 23 வயது போட்டோகிராபர் சில தினங்களுக்கு முன் கொலை செய்யப்பட்டார். அதே பகுதியை சேர்ந்த ஒரு இஸ்லாமிய குடும்பத்துடன் அவர் பழகி வந்துள்ளார். அந்த வீட்டில் உள்ள ஒரு பெண்ணும், அன்கித்தும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

இதற்கு அந்த பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 1ம் தேதி அந்த பெண் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அன்கித் தான் கடத்தியிருக்க கூடும் என்று பெண்ணின் குடும்பத்தினர் நினைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை அன்று இரவு 9 மணிக்கு அன்கித்தை கொலை செய்தார். இந்த கொலை ஒரு ஆணவக் கொலை என்று மீடியாக்களில் செய்தி வெளியானதால் டில்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பாஜக மாநில தலைவர் மனோஜ் திவாரி அன்கித் தந்தை யாஷ்பாலை சந்தித்து ஆறுதல் கூற சென்றார். அப்போது யாஷ்பால் அவரிடம் கூறுகையில், ‘‘ எனக்கு ஒரு மகன் தான் இருந்தான். எனக்கு நீதி கிடைத்தால் அது நல்லது. கிடைக்கவில்லை என்றாலும் நான் எந்த மதத்தக்கும் எதிரானவன் கிடையாது. எனக்கு மத ரீதியிலான சிந்தனை எதுவும் கிடையாது. மீடியாக்கள் ஏன் இந்த பிரச்னை குறித்து இவ்வாறு செய்தி வெளியிடுகின்றன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கூறுகையில்,‘‘ என்னிடம் மீடியாக்கள் பேசும் போது மென்மையாக தான் பேசுகின்றன. ஆனால் தொலைக்காட்சியில் வேறு விதமாக காட்டுகின்றன. எனது உறவினர்கள், அக்கம் பக்கம் வசிப்பர்கள் டிவி.யில் காட்டுவது குறித்து என்னிடம் விசாரிக்கிறார்கள். உண்மையை திரித்து இஸ்லாம் என்ற வார்த்தையை பயன்படுத்தி வெளியிடுகிறார்கள். இதை வெறும் கதையாக அனைவரும் பார்க்கிறார்கள். இச்சம்பவத்தை அரசியல்வாதிகளும், மீடியாக்களும் அரசியலாக்க வேண்டாம். மத பிரச்னையாகவும் ஆக்க வேண்டாம்’’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பெண்ணின் தந்தை, தாய், மாமா, சகோதரர் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.