கண்களில் நீர் கசியவைக்கும் பதிவு: ஒரு “அரசு பேருந்து ஓட்டுனரின்” மகள் பேசுகிறேன்.. 

ங்கரன் – ஓட்டுநர். ஆயிரக்கணக்கான அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் போலவே.

திருவான்மியூர் மற்றும் மந்தவெளி டிப்போவில் சுமார் முப்பது வருடங்கள் பணியாற்றி பத்து வருடம் முன்பு ஓய்வு பெற்றவர்.

இவரது மகள் சுசீலா ஆனந்த், தனது தந்தையின் வருமானத்தைக் கொண்டு தங்கள் குடும்பம் எப்படி இயங்கியது என்பதை நெகிழவைக்கும் விதத்தில் முகநூலில் எழுத…  படித்தவர் கண் கலங்கி நிற்கிறார்கள்.

சுசீலா ஆனந்தின் பதிவு:

“மூத்தவளாய் பிறந்த மூணாம் வருஷத்தில் அப்பாவுக்கு போக்குவரத்து துறையில் ஓட்டுநர் பணி கிடைத்திருந்தது. அதற்குள் தங்கையும் தம்பியும் பிறந்தார்கள். அரசு போக்குவரத்து துறையில் அப்பாவுக்கு பணி கிடைக்கும் வரையில் கான்வென்ட் பள்ளிக்கூடத்தில் படித்து கொண்டிருந்தேன். வேலை கிடைத்த ஓராண்டிலேயே அரசு உதவி பெரும் தமிழ் மீடியம் பள்ளி. அந்தளவிற்குதான் சம்பளம் கிடைத்தது.

அதுவரையில் சென்னைக்குள் குடியிருந்த நாங்கள் வீட்டு வாடகை தர முடியாத சூழலில் சென்னைக்கு வெளியே, துரைப்பாக்கத்தில், பாம்புகள் பல்லிகள் சூழ் பகுதியில் குடிசை வீடொன்றுக்கு வாடைக்கு மாறினோம்.

மூன்றாம் வகுப்பு குழந்தையான நான் , ஒரு கையில் தங்கையும், மற்றொரு கையில் தம்பியும், ஜோல்னா பையுமாக, எட்டாத பல்லவன் பேருந்து படிக்கட்டில் கை வைத்து ஏறி அடையாறில் இருக்கும் அவ்வை இல்ல பள்ளிக்கூடத்துக்கு வருவோம்.

சங்கரன் – சுசீலா

அரசு உதவி பெரும் பள்ளி தான் எனினும் அங்கு கட்ட வேண்டிய கல்வி கட்டணத்துக்கு போக்குவரத்து ஊழியரான அப்பா படும் பாட்டை பார்த்து, நானும் தங்கையும், விடுமுறை தினங்களிலெல்லாம் குழந்தை தொழிலாளர் ஆக்கப்பட்டோம்.

14 -15 வயசில் போட்டிருக்கும் ஆடை முழுக்க screen printing paint வழிய சாலைகளில் நிமிர்ந்து நடக்க கூசி குனிந்து நடந்து வீடு வந்த சேரும் நேரங்களில் எங்களின் தகப்பனார் அரசு பேருந்தில், லட்சக்கணக்கானோரின் பாதுகாப்பான பயணத்துக்கு உத்தரவாதம் தருபவராக நெருக்கடி மிக்க சென்னையின் சாலைகளில் வாகனத்தை செலுத்தி கொண்டிருப்பார்.

விவரம் தெரிந்த நாள் முதல் அப்பா retired ஆகி வரும்வரை 4000 ரூபாய்க்கு கூடுதலான சம்பளத்தை வாங்கியதாக நினைவே இல்லை. உப்பு மிளகாய் புளி கிடைத்தால் அடுப்பு கூட இல்லாமல் குழம்பு வைப்பது எப்படியென்பதை அம்மாவும் இந்த வாழ்க்கையில் பழகியிருந்தாள். .

அதிகாலை முதல் எல்லா வகை ஷிப்ட் களிலும் மாங்கு மாங்கென்று வேலை செய்தும் கடன்கள் தவிர வேறு ஒன்றும் தேறாதது போக்குவரத்து துறை என்று உணர்ந்த நேரத்தில், வேலை மீதுள்ள கோபத்தை வீட்டுக்குள் நுழைந்ததும் காட்டுவார் அப்பா. வீடு, வேலையென உழைத்து கொட்டிய அம்மாதான் அடிதாங்கியாகவும் ஆனார்.

ஒரு முறை திடீரென சபரிமலைக்கு மாலை போட்டு கொண்டு வீட்டுக்கு வந்தார் அப்பா உடன் 13 வயதான தம்பியும். ஒரு விடியற்காலை தம்பியை கூட்டிக்கொண்டு புறப்பட்டு போனவர் தெருக்களில் சாமிக்கு உண்டியல் மூலம் பிச்சை எடுத்து சேர்த்த பணத்தில் வீடு வந்து சேர்ந்தார்கள்.

எண்ணி பார்த்ததில் 3500 தேறியது. மறுநாள் காலை பூசை எல்லாம் முடித்து உண்டியலை உடைத்து எடுத்த பணத்தை எங்கள் மூவருக்கும் பள்ளி கல்வி கட்டணம் கட்ட சொல்லி பிரித்து கொடுத்தார் அப்பா.. “அப்ப கோவிலுக்கு” என்று கேட்ட அம்மாவிடம், எது முக்கியம் னு அய்யப்பனுக்கு தெரியும் என்றார் அப்பா என்ற அரசு சம்பளம் வாங்கி கொண்டிருந்த அரசு போக்குவரத்து ஊழியர்…

30 ஆண்டுகால சேவை முடித்து retired ஆனதில் இருந்து ஓரிரண்டு ஆண்டுகள் ஒழுங்காக 6000 பென்ஷன் வந்து கொண்டிருந்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திடீரென இரு கண் விழிகளில் ஒன்று மட்டும் அப்படியே அசையாமல் நிற்க, அப்பாவை அரசு மருத்துவமனையில் சேர்த்த பொழுது தான் தெரியும் கடந்த இரண்டு ஆண்டுகளாக சரி வர தரப்படாத பென்ஷன் பற்றி.

மீண்டுமொரு முறை, பிறரை சார்ந்திருக்கும் நிலைக்கு தன்னை தள்ளிடுமோ என்ற அச்சம், பென்ஷன் ஆபீசுக்கும், தொழிற்சங்க அலுவலகத்துக்கும் நடந்து நடந்து தொய்வடைந்ததை காட்டிலும் தங்களின் பணம் 7000 கோடியை அப்படியே அமுக்கி வாயில் போட்டு கொண்ட அரசாங்கம் இனி அதை திருப்பி தர கடுமையாக போராட வேண்டுயிருக்கும் என்ற உண்மை தெரிந்து கொண்டதும், தான் இறப்பதற்குள் அது சாத்தியமில்லை என்ற அவநம்பிக்கையும் அவரை முடக்கி போட்ட விஷயத்தை பற்றியும்.

அம்மா தன்னுடைய 65 வயதில் மீண்டும் வேலைக்கு கிளம்பிவிட்டாள். என்ன சொன்னாலும் இது தங்களின் சுயமரியாதை என்கிறாள். எங்கள் வீட்டில் மட்டுமல்ல, ஓராயிரம் அரசு போக்குவரத்து தொழிலாளியின் குடும்பங்களில் இன்று இது தான் நிலை.

இப்போது சொல்லுங்கள், காலமெல்லாம் உழைத்து சேர்த்து அரசிடம் கொடுத்த தங்கள் பணம் 7000 கோடியை 10 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருந்து திரும்ப கேட்க்கும் இந்த போராட்டம் நியாயமற்றதா?

போக்குவரத்து தொழிலாளிகள் போராடி கொண்டிருப்பது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கவா?

# இப்போது சொல்லுங்கள் போக்குவரத்து தொழிலாளர்களின் இந்த போராட்டம் தேவையற்றதா?” – இப்படி முடிகிறது சுசீலா ஆனந்தின் பதிவு.

நாம் அவரிடம் பேசினோம்.

கூடுதலாய் அவர் சொன்ன சில விவரங்கள் இன்னும் கலங்க வைத்தன.

“அப்பா ஓய்வு பெற்ற பிறகு வருமானம் மேலும் குறைந்தது. பென்ஷன் சரிவர கிடைக்க வில்லை. . ஆனாலும் அதுவரை இல்லாத வழக்கமாக, வாரந்தோறும் டை (தலைச்சாயம்) வாங்கிவந்து அம்மாவை போட்டுவிடச் சொல்வார்.

இது அலங்காரத்துக்காக அல்ல.

தலைமுடி நரைத்திருந்தால், தனியார் நிறுவனங்களில் செக்யூரிட்டி வேலை தரமாட்டார்கள் அல்லவா? அதற்காக.

ஆமாம்.. மிகச் சமீபம் வரை தனியார் நிறுவன செக்யூரிட்டியாக வேலை செய்தார் அப்பா.

ஆனால் பல தொழிலாளகர்களுக்கு ஓய்வுக்கு பிறகு பணி பலன்கள் சுத்தமாக கிடைக்க வில்லை. எந்த பலனும் கிடைக்காமலேயே  இறந்து போய்விட்ட தொழிலாளர்கள் ஏராளமானோர் உண்டு” என்ற சுசீலா, “என் அம்மா, அம்மா வசந்தா தனியார் மருத்துவமனையில் ஆயாம்மாவாக பணிபுரிகிறார். இந்த 65 வயதிலும் அவர் வேலைக்குச் செல்ல காரணம் என்ன தெரியுமா?

அவர் பணிபுரியும் மருத்துவமனையில் ஈ.எஸ்.ஐ. வசதி உண்டு. அதாவது குடும்பத்தினருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டால் அரசு இலவசமாக சிகிச்சை அளிக்கும்.

அப்பாவுக்கு சுகர் தொல்லை உண்டு. அதற்கான மருந்து மாத்திரைகளை பணம் கொடுத்து வாங்கும் நிலையில் குடும்பம் இல்லை. ஆகவேதான் அப்பாவுக்காக, இந்த தள்ளாத வயதிலும் ஆயாம்மாவாக வேலைக்குச் செல்கிறார் அம்மா!” என்று சொல்லி முடிக்கும்போது சுசீலாவின் கண்கள் கலங்கியிருந்தன.