சினிமாவுக்கு வரிவிலக்கு: வியசாயிகளுக்கு செய்யும் துரோகம்!

திரைப்படங்களுக்கு அளிக்கப்படும் வரிவிலக்கை நீக்க வேண்டும் என்று காந்தியவாதிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த முறைக்கும் முந்திய தி.மு.க. ஆட்சியின்போது, “தமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும்” என்று அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

இதற்கு அப்போதே பரவலாக எதிர்ப்பு கிளம்பியது.  இந்த முடிவு, கடனில் தத்தளிக்கும் நிலையில் தமிழக அரசுக்கு மேலும் பாரமாகும் என விமர்சிக்கப்பட்டது. ஆனால் இன்றளவும் கேளிக்கை வரிவிலக்கு தொடர்கிறது.

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

இந்த நிலையில் தக்கர்பாபா வித்யாலயா கமிட்டி என்ற காந்தியவாதிகள் அமைப்பு, “திரைப்படங்களுக்கு வழங்கப்படும் கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும். அதில் வரும் வருவாயை விவசாய நிவாரண பணிகளுக்கு ஒதுக்க வேண்டும்” என்று வலியுறுத்தி வருகிறது.

இதற்கான கூட்டம் வரும் ஞாயிறு அன்று கூடுவதோடு, இக் கோரிக்கையை தீர்மானமாக  இயற்றி தமிழக அரசுக்கு அனுப்பவும் உள்ளது.

இந்த நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி வருபவரும் தக்கர்பாபா வித்யாலயா கமிட்டி கூட்டத்தில் கேளிக்கை வரிவிலக்கு குறித்து சிறப்புரையாற்றப்போகிறவருமான  எழுத்தாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தியை தொடர்புகொண்டு பேசினோம்.

அவர், “தமிழக அரசின் நிதிநிலை மிகவும் மோசமாக உள்ளது. கடன்களாலும் அதற்கு கட்டிவரும் வட்டிகளாலும் அரசு  தத்தளித்துக்கொண்டிருக்கிறது. தமிழகம் முழுதுமே மிகக் கொடிய வறட்சியை சந்தித்துக்கொண்டிருக்கிறது. மேலும் நிவாரண நிதி கேட்டு தமிழக விவசாயிகள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே உடனடியாக அரசு, திரைப்படங்களுக்கு அளிக்கப்பட்டுவரும் கேளிக்கை வரி விலக்கை ரத்து செய்ய வேண்டும்.

தமிழில் பெயர் வைத்தால் கேளிக்கை வரி விலக்கு என்று கொண்டுவரப்பட்டது நகைப்புக்குரிய ஒன்று. தமிழ்ப் பண்பாட்டுக்கு முற்றிலும் புறம்பான திரைப்படங்களை எடுத்துவிட்டு பெயர் மட்டும் தமிழில் வைத்தால் போதும் கேளிக்கைவரியில் விலக்கு கிடைத்துவிடும் என்ற நிலையை என்னவென்று சொல்வது?

அதுவும் பல திரைப்படங்களுக்கு இரண்டுவிதமான தலைப்புகள் வைக்கிறார்கள். அதாவது  கேளிக்கை வரி விலக்குக்காக  ஒரு தலைப்பு… மக்களிடம் பிரபலப்படுத்த தமிழ் அல்லாத ஒரு தலைப்பு!

போதாக்குறைக்கு கேளிக்கை வரியின் முழுப்பயனும் நுகர்வோரை சென்று அடைவதில்லை. அந்தத் தொகையையும் சேர்த்து வசூலிக்கிறார்கள்.  பல படங்களுக்கு,  டிக்கெட் விலையைவிட பல மடங்கு அதிக தொகையை வசூலிக்கிறார்கள்.

ஆக.. இந்த வரிவிலக்கு அரசுக்கும் பயனில்லாமல், மக்களுக்கும் பயனில்லாமல் போகிறது. இதனால் அரசு வரிப்பணம் வீணாகிக்கொண்டிருக்கிறது.

தவிர எந்தெந்த திரையரங்குகளில் எவ்வளவு நுழைவுச்சீட்டுக்கள் விற்பனை ஆகின்றன..என்கிற தகவல்கூட கிடைப்பதில்லை.

வரலாறு காணாத வசூல் என்று விளம்பரப்படுத்தும் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள்கூட வரி என்று வரும்போது  பெரும் இழப்பு ஏற்பட்டதாக கணக்கு காட்டுகிறார்கள்.

ஆகவே கேளிக்கை வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.  இதன் மூலம் வருடத்துக்கு சுமார் நூறு கோடி ரூபாய் அரசுக்கு கிடைக்கும்.

ஒரே ஒரு அரசாணை போதும். உடனடியாக  அரசு இந்த பணம் வந்துவிடும். இந்தத் தொகையை முழுமையாக விவசாய ரீதியான பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும்” என்றார் எழுத்தாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.

விஷால்

அவரிடம், “டிக்கெட் கட்டணத்தில் இருந்து ஒரு ரூபாயை விவசாயிகளுக்கு உதவ அளிக்கப்போவதாக நடிகர் விஷால் கூறியிருக்கிறாரே” என்று கேட்டோம்.

அதற்கு பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, “கேளிக்கைவரி என்பது 30சதவிகிதம். அதாவது ஒரு டிக்கெட் விலை நூறு ரூபாய் என்றால் அதில் 30 ரூபாய் கேளிக்கைவரி. இதை ரத்து செய்ததால் ஒரு டிக்கெட்டுக்கு30 ரூபாய், அநியாயமாக திரைத்துறையினருக்குச் செல்கிறது.

ஆகவே விவசாயிகளுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று விஷால் உண்மையிலேயே நினைத்தால், கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்கிற எங்கள் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, தமிழக அரசிடம் அவரும் வலியுறுத்தட்டும்.

அதைவிட்டுவிட்டு, மக்கள் பணத்தை 30 ரூபாய் பிடுங்கிக்கொண்டு, அதில் ஒரு ரூபாய் திருப்பித்தருகிறேன் என்பது சரியான செயல் அல்ல!” என்றார்.

Leave a Reply

Your email address will not be published.