“தயாரிப்பாளர் சங்க தலைவர் பொறுப்பில் இருந்து நடிகர் விஷால் விலக வேண்டும்” என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பகிரங்கமாக வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை:

“தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் நடந்த விதிமுறை மீறல்களைப் பற்றி விளக்கம் தரக் கடமைப்பட்டுள்ளேன்.  இது எனது விளக்கம் அல்ல. சங்க பொதுக்குழுவை முன்னின்று நடத்தித் தர நியமிக்கப்பட்ட நீதிபதி அவர்கள் தாக்கல் செய்த அறிக்கை..

பொதுக்குழு அன்று சரியான நேரத்தில் நிர்வாகிகள் வரவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது நிர்வாகிகள் இல்லை. தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்து அவமானம் நேரும் வகையில் நடந்துள்ளனர்.

சங்கத்தின் ஆண்டு வரவு செலவை விசால் தரப்பினர் தாக்கல் செய்ததாக சொல்லி வருவது தவறு. அவ்வாறு அவர்கள் தாக்கல் செய்யவில்லை.

அதைக் கேட்ட ஒருதரப்பினருக்கும் இன்னொரு தரப்பினருக்கும் வாக்குவாதம் கருத்துமோதல் ஏற்பட்டது. இருதரப்பினருமே இதில் சரிசமமாக ஈடுபட்டனர்.

நிறைவாக, தேசியகீதம் பாடுவதை நீதிபதியாகிய என்னிடம் கூட முறைப்படி அனுமதி பெறாமல் தன்னிஷ்டமாக கூட்டத்தை முடித்துவிட்டுக்கிளம்பிவிட்டனர் நிர்வாகிகள்”

எனக் குறிப்பிட்டுள்ளார் நீதிபதி அவர்கள். அதன் நகலை உங்களுக்கு அனுப்பியுள்ளேன். அதை கிரகித்துக்கொண்டு விசால் பரப்பிவரும் பொய்செய்தியை தவிர்த்து அவரது உண்மை முகத்தை வெளிக்கொணர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். மேலும் அன்று கணக்கு கேட்ட அத்தனை பேர் மீதும் ஷோகேஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் விசால். கணக்கு கேட்ட நடிகர் சங்க உறுப்பினர்கள் முந்நூறு பேரை நீக்கியவர் தயாரிப்பாளர் சங்கத்திலும் உறுப்பினர்களை மிரட்டும் வண்ணம் நடந்துகொள்கிறார்.  உறுப்பினர்களின் கேள்வியை எதிர்கொள்ள முடியாத நிர்வாகம் அவர்கள் மீது நீக்கம் என்ற அராஜக ஆயுதத்தை வீசுகிறது. இது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடக்கப்போகும் தவறான முன்னுதாரணமாகிவிடும்.

எனவே விசால் தனது தரப்பு தவறுகளை முதலில் ஒப்புக்கொண்டு பதவி விலகுவதே சரியானதாக இருக்கக்கூடும்” என்று சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.