திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் களைகட்டியிருக்கிறது. இயக்குநர் சேரனை, விஷால் சீண்ட.. பதிலுக்கு அவர் எகிற.. அந்த களேபரம் ஓய்ந்தது.

இப்போது விஷால் அணியைச் சேர்ந்த இயக்குநர் மிஷ்கின், சேரனை கிண்டலடிக்க… பதிலுக்கு மிஷ்கினை உண்டு இல்லை என்று ஆக்கியிருக்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

ஆமாம்.. மிஷ்கினுக்கு சுரேஷ்காமாட்சி எழுதியிருக்கும்  கடிதத்தை படித்துப் பாருங்கள்.. உங்களுக்கே புரியும்.

மிஷ்கின் – சுரேஷ் காமாட்சி

“உலக சினிமாவை மட்டுமே இயக்கும் இயக்குநர் மிஸ்கின் அவர்களுக்கு,

நான் “உலக சினிமா” என்று சொன்னதற்கு அர்த்தம் புரிந்திருக்குமே உங்களுக்கு.. ஒன்று டிவிடி இல்லைன்னா உலகப்புத்தகம் இதுதானே உங்கள் சினிமா அறிவு?

எங்கே சேரன் மாதிரி இந்த மண்ணுக்காக நீங்கள் எடுத்த படம் எதுன்னு சொல்லுங்க பார்ப்போம்? இயக்குநர் சேரனைப்போல இந்த மக்களின் உணர்வைப் படம்பிடிக்கும் ஒரு காட்சியையாவது இந்த மண்ணிற்காகவும் இந்த மக்களுக்காகவும் எடுத்துவிட்டுப் பேசுங்கள் உலக இயக்குநரே!

தயவுசெய்து ஒருவரைப் பற்றி பேசும் முன் அவர் யார்? அவர் என்ன செய்திருக்கிறார்? நாம் என்ன செய்திருக்கிறோம்? என்பதை உணர்ந்து பேச வேண்டும். தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டி போடுவதால் மட்டும் தயாரிப்பாளர் நலனில் நீங்கள் அக்கறையுள்ளவர் என்று எப்படி சொல்ல முடியும்?

எந்த தயாரிப்பாளரை நீங்கள் இயக்கிய படங்களின் மூலம் காப்பாற்றியிருக்கிறீர்கள்? ஐந்து கோடி முதல் பிரதி என ஒப்பந்தம் செய்து எட்டு கோடிவரை இழுத்து விட்டு பஞ்சாயத்து பண்ணியது நினைவில்லையோ?

தனஞ்செயன் பட்ஜெட்டை இழுத்துப் பிடித்த போது கோபத்தில் செல்போனை உடைத்ததெல்லாம் செய்தியாக வந்ததே? மறந்துபோனதா அய்யா?

செயலாளர் பதவிக்கு வரணும்னா அட்லீஸ்ட் தயாரிப்பாளர் சங்கத்தின் முகவரியாவது தெரிந்திருக்க வேண்டுமே.. கூட்டிக்கழிச்சிப் பாருங்க ஒரு பத்து முறை தயாரிப்பாளர் சங்கம் பக்கம் வந்திருப்பீங்களா? அதிலும் ஐந்து முறை உங்க மேல வந்த பஞ்சாயத்துக்காக வந்திருப்பீங்க. . நீங்களெல்லாம் செயலாளர்? அந்தப் பதவி என்ன வரைமுறைக்குட்பட்டது என்பதுகூட தெரியாத நீங்கள் ஆளில்லாத குறைக்கு துப்பறிவாளன் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஷால் ஏத்திவிட்டதை நம்பி போட்டிபோட வந்துட்டீங்க.

விஷால் இராத்திரியும் பகலுமா உழைக்கிறார்.. சரி! நாங்க என்ன ஐஸ் சப்பிக்கிட்டா திரியறோம்?? அவரின் நோக்கம் ஆட்டைக் கடிச்சி மாட்டைக் கடிச்சி மனுசனைக் கடிக்கிற நோக்கம். அதுக்காக அவர் எங்கள் சங்க நலனுக்காகவும் எங்கள் உறுப்பினர் நலனுக்காகவும் இரவும் பகலுமா உழைக்கிறார்னு அண்டப் புளுகு புளுகாதீங்க. அட நடிகர் சங்கத்துக்காக உழைச்சார்னு சொல்லிடாதீங்க. நடிகர் சங்க ஆட்கள் அடிக்க வந்துரப்போறாங்க.

கண்ணாடியை கழட்டிட்டுப் பாருங்க. இந்த உலகம் பளீச்சுன்னு தெரியும். நீங்க இந்த உலகத்தை பளீரென பார்க்கக்கூடாதுங்கிறதுக்காக இருட்டாவே வச்சிக்கிட்டு திரியற ஆளு.

ஏதோ உலகப் படத்தைப் பார்த்தோமா? பாவனா மாதிரி யாரையாவது ஹீரோயினாகப் போட்டோமா? விஷால் மாதிரி ஏதாவது ஹீரோக்கள் காலில் விழுந்து கால்ஷீட் வாங்கினோமான்னு காலத்தை ஓட்டுங்க.

சேரன் எங்கள் சினிமாவின் சொத்து. தமிழர்களின் உணர்வுமொழி அவர். அவர் பற்றிப் பேச அருகதையற்றவர்கள் நீங்கள்.

தயவுசெய்து போட்டியிட்டோமா ஓட்டுப்பிச்சை எடுத்தோமா? அடுத்தவன் காசுல தயாரிப்பாளரானோமான்னு போய்க்கிட்டே இருங்க.

திருட்டு விசிடி உட்பட மத்ததை உண்மையாவே காசு போட்டு படம் எடுக்கிற நாங்க பார்த்துக்கிறோம்!

நிறைவாக, ஒரே ஒரு வேண்டுகோள்!

சொந்தமா யோசிச்சு சிந்திச்சு மூளையைக் கசக்கி ஒரே ஒரு கதை எழுதிட்டு வாங்கம்மா. மத்ததை அப்புறம் வச்சுக்கலாம்!

– இப்படிக்கு,

தயாரிப்பாரளர் சுரேஷ் காமாட்சி”