சென்னை,

டிடிவி ஆதரவாளராக அறியப்பட்ட முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் சமீப நாட்களாக ஒதுங்கி இருந்தார்.

இந்நிலையில், ஜெயலலிதா அமைத்த ஆட்சி தொடர, டிடிவி தினகரனை அழைத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேச வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

ஓபிஎஸ் – இபிஎஸ் அணிகள் இணைந்ததை தொடர்ந்து தமிழக அரசியலில் பரபரப்பாக சூழல் நிலவி வருகிறது. ஆட்சி எந்த நேரத்திலும் கவிழலாம் என்ற சூழல் உருவாகி வருகிறது.

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், டிடிவியின் ஆதரவாளராக அறியப்பட்ட முன்னாள் சுற்றுச்சூழல்துறை அமைச்சரும், பெருந்துறை எம்எல்ஏவுமான  தோப்பு வெங்கடாசலம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

‘அணிகள் ஒன்றாக இணைய வேண்டும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு உரிய மரியாதை தர வேண்டும் என ஏற்கெனவே நான் சொல்லியிருக்கிறேன். அதில் இருந்து இப்போது நான் மாற்றிப்பேச முடியாது’.

அதிமுக எம்எல்ஏக்களை முதல்வர் எடப்பாடி அழைத்துப் பேச வேண்டும் என்றும், டிடிவி தினகரனையும் சந்தித்து பேச வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை வைத்தார்.

மேலும், பாராளுமன்றத்தில் 3வது பெரிய கட்சியாக அதிமுகவை உயர்த்திய ஜெயலலிதாவின் ஆட்சியை 4 ஆண்டுகள் தொடர அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என்றும் கூறினார்.

முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, இரண்டாக உடைந்த அதிமுக பின்னர் சசிகலா குடும்பத்தினரின் நெருக்குதல் காரணமாக மூன்றாக உடைந்தது.

இதன் காரணமாக எடிப்பாடி அணி இரண்டாக உடைந்து, டிடிவி தினகரன் தலைமையில் தனி அணி உருவானது. அன்று முதல் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தினகரன் ஆதரவாளராகத் தன்னைக் காட்டிக் கொண்டார்.

இதன் காரணமாக அவருக்கு டிடிவி  கட்சியின் அமைப்புச் செயலாளராக பதவி கொடுத்து மடக்கி வைத்திருந்தார். அதையடுத்து,   தினகரன் நடத்திய ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்றதோடு, மதுரை மேலூரில் தினகரன் நடத்திய பொதுக் கூட்டத்திலும் தோப்பு வெங்கடாசலம் பங்கேற்றார்.

இதற்கிடையில் ஓபிஎஸ் – இபிஎஸ் அணிகள் இணைந்ததால்,  தினகரன் தலைமையில் நடந்த ஆலோசனைகளில் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்தார் தோப்பு வெங்கடாசலம்.

அதிமுகவின் இரு அணிகளும் நேற்று இணைந்த நிகழ்ச்சியின்போது,  தினகரனால்  பதவிகளைப் பெற்ற பல நிர்வாகிகள் அதில் கலந்து கொண்டனர்.

ஆனால், தோப்பு வெங்கடாசலம் அந்த நிகழ்ச்சியில் பங்குபெறாமல் தவிர்த்து வந்தார். இதன் காரணமாக அவர் எந்த அணியில் இருக்கிறார், மீண்டும் எடப்பாடி அணிக்கு சென்று விட்டாரா என்று கேள்வி எழுந்துள்ள நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, டிடிவி தினகரனையும் அழைத்து பேச வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.