சென்னை :

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு  இணையதளத்தில் வெளியீடப்பட்டுள்ளன. பிளஸ் 1 பொதுத்தேர்வில் 91.3% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

97.3% பேர் தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  பிளஸ் 1 பொதுத் தேர்வு கடந்த  மார்ச் மாதம் 7ந்தேதி தொடங்கி ஏப்ரல் 16ந்தேதி முடிவடைந்தது.   மொத்தம்  8 லட்சத்து 63 ஆயிரம் பேர் தேர்வெழுதியுள்ளனர்.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி இன்று தேர்வு முடிவுகள் வெளியாயின. இதில் 91.3 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.  மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 94.6 சதவிகிதம் என்றும், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 87.4 சதவீதம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மாணவர்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய அரசு தேர்வுத் துறையின் இணையதளங்களிலும் தேர்வு முடிவுகளை மதிப்பெண் விவரங்களுடன் அறிந்து கொள்ளலாம்.

கடந்த 2017 -ஆம் ஆண்டு வரை பிளஸ் 1 தேர்வு, பள்ளி அளவிலான ஆண்டுத் தேர்வாகவே நடத்தப்பட்டது. இந்த ஆண்டுதான் முதன் முதலாக பொதுத்தேர்வாக நடைபெற்றது. இந்த ஆண்டு தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், பிளஸ்-2 தொடர்ந்து படிக்கலாம். அதே வேளையில்,   தேர்ச்சிபெறாத பாடங்களை சிறப்பு துணைத் தேர்வு எழுதி தேர்ச்சிபெற வேண்டும்.

அடுத்த ஆண்டு பிளஸ் 2 தேர்வை முடிக்கும்போது, இரு பொதுத்தேர்வுகளின் (பிளஸ் 1, பிளஸ் 2) மதிப்பெண்கள் அடங்கிய தொகுப்பு மதிப்பெண் பட்டியல் அவர்களுக்கு வழங்கப்படும்.