சென்னை:

மிழகம் மற்றும் புதுச்சேரியில்  பிளஸ்1 வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. தேர்வில் காப்பியடிக்கும் மாணவர்கள் 3 ஆண்டுகள் தேர்வு எழுத முடியாது என்று கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஆண்டு முதல் பிளஸ்-1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.  இந்த ஆண்டு  8.21 லட்சம் மாணவ, மாணவிகள் பிளஸ்-1 பொதுத் தேர்வை  எழுதுகின்றனர்.

இதற்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2,914 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களை ஆய்வு செய்ய 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன .

ஏற்கனவே தேர்ச்சி பெறாத 84 ஆயிரம் பேர் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதவும், தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

10 ,11, 12 ம் வகுப்பு பொது தேர்வில் மாணவர்கள் காப்பி அடித்தால் ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காப்பி அடிக்கும் மாணவர்களை பறக்கும்படையினர் கண்டுபிடித்தால், சம்பந்தப்பட்ட தேர்வு அறையின் கண்காணிப்பாளருக்கும் நோட்டீஸ் அனுப்ப தேர்வாணையம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளி பொதுத் தேர்வுகளில் காப்பியடித்து பிடிபடும் மாணவர்கள், பொதுத் தேர்வு முழுவதும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.  மேலும், அடுத்து வரும்  இரண்டு பொதுத் தேர்வுகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்படும் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து தேர்வுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

தேர்வறையில் கண்காணிப்பாளரால் சோதனை செய்யப்படாத நிலையில், தானாக முன்வந்து தான் வைத்திருந்த புத்தகம் அல்லது எழுதப்பட்ட துண்டு தாள்களை ஒப்படைக்கும் மாணவர்கள் முதல் கட்டமாக எச்சரிக்கப்படுவர்.

தொடர்ந்து இதே தவறைச் செய்யும் மாணவர்களிடம், விளக்கக் கடிதம் பெறப்பட்டு  பின்னர் தேர்வறையிலிருந்து வெளியேற்றப்படுவர்.

மாறாக, கண்காணிப்பாளரால் பிடிக்கப்படும் மாணவர்கள், அந்தத் தேர்வில் பங்கேற்கத் தடை விதிக்கப்படுவதோடு, அடுத்து வரும் இரண்டு பொதுத் தேர்வுகளிலும் பங்கேற்கத் தடை விதிக்கப்படும்.

அதேபோல, பக்கத்து மாணவரைப் பார்த்து காப்பியடிக்கும் அல்லது வேறு நபர்களிடம் உதவியைப் பெற முயலும் மாணவர்களுக்கு, அந்தத் தேர்வு முழுவதும் பங்கேற்கத் தடை விதிக்கப்படும் என்பதோடு, அடுத்த ஓராண்டுக்கு அல்லது அடுத்து வரும் இரண்டு தேர்வுகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்படும்.

பொதுத் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு, அந்தத் தேர்வு முழுவதும் அனுமதி மறுக்கப்படும் என்பதோடு, பொதுத் தேர்வில் பங்கேற்பதிலிருந்து நிரந்தரமாகத் தடை விதிக்கப்படும்.

வேறொரு மாணவருக்கு உதவும் வகையில் தனது விடைத் தாளில் பதிவு எண்ணை மாற்றிக் குறிப்பிடுதல் அல்லது விடைத்தாளை வேறு மாணவருடன் மாற்றிக் கொள்ளுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு அந்தத் தேர்வு முழுவதும் பங்கேற்கத் தடை விதிக்கப்படுவதோடு, அடுத்த 5 ஆண்டுகளுக்கு  பங்கேற்கத் தடை விதிக்கப்படும்.

அதுபோல, கேள்வித் தாளை தேர்வறையிலிருந்து வெளியில் அனுப்பி விடும் மாணவர்களுக்கு அந்தத் தேர்வு முழுவதும் தடை விதிக்கப்படுவதோடு, அடுத்த மூன்று ஆண்டுகளுக்குத் தேர்வில் பங்கேற்கத் தடை விதிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

பிளஸ்-1 பொதுத்தேர்வு கால அட்டவணை

2019 மார்ச் 6- தமிழ்

2019 மார்ச் 8- ஆங்கிலம்

2019 மார்ச் 12- கணிதவியல், விலங்கியல், வணிகவியல், மைக்ரோ-பயாலஜி.

2019 மார்ச் 14- இயற்பியல், பொருளாதாரம், கம்ப்யூட்டர் தொழில்நுட்பம்.

2019 மார்ச் 18- உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல்.

2019 மார்ச் 20- வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்.

2019 மார்ச் 22- கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், கணினி பயன்பாடுகள், பயோ-கெமிஸ்ட்ரி, சிறப்பு பாடம் (தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல் மற்றும் புள்ளியியல்.