பிளஸ்2 ரிசல்ட் வெளியானது: தமிழகத்தில் 1907 பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி

சென்னை:

மிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.  இதில், விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

மேலும், 1907 பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி பெற்றிருப்பதாகவும்,  இவற்றில் 238 அரசு பள்ளிகள் 100 சதவிகிதம்  தேர்ச்சி பெற்றிருப்பதும் சாதனையாகும்.. 91.1 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருப்பதாகவும், அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளனார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்2 தேர்வுகள்  கடந்தா  மார்ச் 1–ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6–ந் தேதி முடிவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்  6 ஆயிரத்து 903 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதியிருந்தார்கள். தனி தேர்வர்களுடன் சேர்த்து 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் தேர்வு எழுதினார்கள்.

இந்நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வு முடிகளை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.

அதன்படி தமிழகம், புதுவையில் உள்ள 1907 பள்ளிகளில் 100 சதவிகித தேர்ச்சி பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு  238 அரசு பள்ளிகளும் 100 சதவிகிதம்  தேர்ச்சி பெற்று சாதனை படைத்திருக்கிறது.

பிளஸ்2 பொதுத்தேர்வில் 91.1 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட ஒரு சதவீதம் தேர்ச்சி  குறைவு. மேலும்,  மாணவிகள் 94.1 சதவீதமும்,, மாணவர்கள் 87.7 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

எப்போதும்போல இந்த ஆண்டும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று சாதனையை தொடர்ந்து வருகின்றனர்.

இந்த பிளஸ்2 தேர்வு முடிவில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பெற்றுள்ளது. இங்கு 97 சதவிகிதம் தேர்ச்சி பெற்றிருப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது. அதைத்தொடர்ந்து ஈரோடு 96.3 சதவிகிதம் தேர்ச்சியுடன் 2வது இடத்தையும், 96.1 சதவிகிதத்துடன் திருப்பூர் மாவட்டம் 3வது இடத்தையும் பிடித்துள்ளது.

பிளஸ்2 தேர்வில் தோல்வியடைந்த மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்கள், ஜூன் 25ல் மீண்டும் தேர்வெழுதலாம் என்றும், தனியார் பள்ளிகளில் சிறந்த மாணவர்களின் புகைப்படங்களை விளம்பரங்களாக வெளியிடக் கூடாது மீறும் தனியார் பள்ளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறி உள்ளார்.