நியூயார்க்: புளூட்டோ என்பது ஒரு கிரகம்தான் என்று மீண்டும் உறுதிசெய்துள்ளார் நாசா அமைப்பின் தலைமை நிர்வாகியான ஜிம் பிரைடன்ஸ்டின்.

தனது கருத்தில் தான் உறுதியாக இருப்பதாய் அவர் கூறியுள்ளார். ஓக்லஹோமாவில் நடைபெற்ற முதல் ரோபோடிக் நிகழ்வில் அவர் பேசியபோது இதைக் குறிப்பிட்டார்.

“எனது கருத்தின்படி புளுட்டோ என்பது ஒரு கோள். எனவே, நாசாவின் தலைவர் புளூட்டோவை ஒரு கோள் என்பதாக மீண்டும் கூறிவிட்டார் என்று நீங்கள் எழுதிக் கொள்ளலாம். நான் அந்தக் கருத்தில் உறுதியாக இருக்கிறேன். ஏனெனில், எனது ஆய்வுக்குட்பட்டு நான் கண்டறிந்த விஷயமாகும் இது” என்று கூறியுள்ளார் அவர்.

கடந்த 1930ம் ஆண்டு புளூட்டோ கண்டறியப்பட்டது. இதைக் கண்டறிந்தவர் அமெரிக்க வானியல் ஆராய்ச்சியாளர் கிளைட் டோம்பக். அந்த நேரத்தில், சூரியக் குடும்பத்தில் 9வது கிரகமாக புளூட்டோ கருதப்பட்டது.

சோலார் குடும்பத்தின் வெளிவட்டப் பாதையில் குய்ப்பர் வளையத்தில் புளூட்டோ அமைந்திருந்தது. ஆனால், அதேபோன்று தோற்றமுடைய வேறு அம்சங்களும் அப்பகுதியில் கண்டறியப்பட்டதால் புளூட்டோ ஒரு கோள் அல்ல என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த சர்ச்சை தொடர்ந்து நீடித்துவந்த நிலையில், தற்போது நாசா தலைவர் அது கோள்தான் என்று மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார்.