வெங்காய விலை குறைப்புக்கு உதவ அரசுத் துறைகளை நாடும் மோடி

டில்லி

திகரித்து வரும் வெங்காய விலையைக் குறைக்க புலனாய்வுத் துறை, உளவுத்துறை,  அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை உதவிகளை பிரதமர் மோடி கோரி உள்ளார்.

கடந்த சில மாதங்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக மகாராஷ்டிரா உள்ளிட்ட பல வெங்காயம் விளையும் மாநிலங்களில் பயிர்கள் அழிந்ததால் வெங்காய உற்பத்தி கடுமையாகப்  பாதிக்கப்பட்டது.   இதனால் வெங்காய வரத்து பெருமளவில் குறைந்ததால் வெங்காய விலை சரசரவென  உயர்ந்தது. தற்போது ஒரு கிலோ வெங்காயம் ரூ. 80  முதல் ரூ. 100  வரை விற்கப்படுவதால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வெங்காய தட்டுப்பாட்டை குறைக்க மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்குத் தடைவிதித்தது.  மேலும் வெங்காயத்தைப் பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.  வெங்காயத்தைப் பதுக்கி வைக்கும் வர்த்தகர்களைப் பிடிக்க வேளாண்மை மற்றும் வாடிக்கையாளர் விவகார அமைச்சக அதிகாரிகள் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி இந்த அதிகாரிகளுக்கு உதவப் புலனாய்வுத் துறை, உளவுத் துறை,   அமலாக்கத்துறை, மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி இந்த அதிகாரிகள் மொத்த விற்பனையாளர்களிடம் கணக்கில் உள்ளதை விட அதிக அளவில் வெங்காயம் உள்ளதா என்பதையும் அளவுக்கு மீறி வெங்காய இருப்பு உள்ளதா என்பதையும் சோதிக்க உள்ளனர்.

உளவுத் துறை மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சந்தைகளில் மட்டுமின்றி வெங்காயம் அதிகம் உற்பத்தி ஆகும் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உள்ளிட்ட மாநிலங்களில் விவசாய பகுதிகளையும் கண்காணிக்க உள்ளனர்.   அத்துடன் குறிப்பிட்ட விலைக்கு மேல் மிக அதிகமாக விலைக்கு வெங்காயம் விற்கப்படும் இடங்களிலும் இவர்கள் கண்காணிக்க உள்ளனர்.