பிஎம் கேர்ஸ் நிதியம் பொது அதிகார அமைப்பு அல்ல…! ஆர்டிஐ கேள்விக்கு பதில் தர பிரதமர் அலுவலகம் மறுப்பு

டெல்லி: பிஎம் கேர்ஸ் நிதியம் பொது அதிகார அமைப்பு அல்ல என்று பிரதமர் அலுவலகம், ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட விவரங்களை தர மறுத்துள்ளது.

நாட்டில் எந்தவொரு அவசர நிலை மற்றும் பேரிடர் போன்ற சூழ்நிலைகளை கையாள்வதற்காக,  பிஎம் கேர்ஸ் பண்ட் என்ற பெயரில் நிதி உருவாக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் அதன் தலைவராகவும், மூத்த அமைச்சரவை உறுப்பினர்கள் அறங்காவலர்களாகவும் நியமிக்கப்பட்டனர். இதற்கு நிதி வழங்கும்படி பிரதமர் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து கோடிக்கணக்கான ரூபாய் நிதி குவிந்தது. இதன் மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு செலவிடப்பட்டு வருகிறது.

பிரதமர் தேசிய நிவாரண நிதி என்ற ஒன்று ஏற்கெனவே பேரிடர் நிதி நிவாரணத்துக்காக இருக்கும் போது எதற்காக தற்போது பிரதமர் கேர்ஸ் (PM CARES Fund)என்ற புதிய நிதியத்தை உருவாக்க வேண்டும், என்ன அவசியம்? இதற்கு பிரதமர் மோடி காரணங்களை நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டியுள்ளது என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பி வருகிறது.

இந் நிலையில், பிரதமர் கேர்ஸ் நிதியம் ஒரு பொது அமைப்பு அல்ல மத்திய அரசு கூறியிருக்கிறது. இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெங்களூரைச் சேர்ந்த சட்ட மாணவர் ஒரு விண்ணப்பத்திருந்தார். பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகள் நிவாரணத்தின் அரசியலமைப்பு குறித்த விவரங்களை அவர் கோரி இருந்தார்.

நிதியத்தின் பத்திரங்கள், அதன் செயல்பாடுகள் உள்ளிட்ட அனைத்து அரசு உத்தரவுகளை காண்பிக்குமாறு அவர் கேட்டிருந்தார். இதற்கு பிரதமர் அலுவலகம் பதிலளித்து உள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 இன் பிரிவு 2 (எச்) இன் கீழ் PM கேர்ஸ் நிதி ஒரு பொது அதிகாரம் அல்ல என்று தகவல் அறியும் விண்ணப்பத்திற்கு பிரதமர் அலுவலக அதிகாரி பதிலளித்து உள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஒரு பொது அதிகாரம் என்பது (அ) அரசியலமைப்பின் கீழ் அல்லது (ஆ) பாராளுமன்றத்தால் செய்யப்பட்ட வேறு எந்த சட்டத்தினாலும் அல்லது (சி) அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட அறிவிப்பு அல்லது உத்தரவின் மூலமாக நிறுவப்பட்ட ஒரு அமைப்பாகும்.

இந்த வரையறை அரசாங்கம் மற்றும் அரசு சாரா நிறுவனங்களால் கணிசமாக நிதியளிக்கப்பட்ட நிறுவனங்களையும் உள்ளடக்கியது என்றும் தெரிவித்துள்ளார். தேவையான தகவல்களை வழங்க பிரதமர் அலுவலகம் வழங்க மறுத்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக விண்ணப்பதாரர் தெரிவித்துள்ளார்.