டில்லி

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து முதல் கட்டமாக ரூ.3100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் தீவிரம் அடைந்தபோது பிரதமர் மோடி பி எம் கேர்ஸ் நிதி என்னும் அறக்கட்டளையை உருவாக்கினார்,  கடந்த மார்ச் மாதம் உருவாக்கப்பட்ட இந்த அறக்கட்டளையில் பிரதமர் மோடி தலைவராகவும் மத்திய அமைச்சர்கள், ராஜ்நாத்சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோர் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.   இந்த அறக்கட்டளை இதுவரை எந்த நிதியும் ஒதுக்கீடு செய்யாததால் எதிர்க்கட்சிகள் காடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் பி எம் கேர்ஸ் நிதியில் இருந்து முதல் கட்டமாக ரூ.3100 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.    அந்த அறிக்கையில், “பி எம் கேர்ஸ் நிதியில் முதல்கட்டமாக ஒதுக்கப்பட உள்ள ரூ.3,100 கோடியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெண்டிலேட்டர் வாங்க ரூ.2ஆயிரம் கோடியும், புலம்பெயர் தொழிலாளர்கள் நலனுக்காக ரூ.ஆயிரம் கோடியும், கரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிக்கு ஆதரவாக ரூ.100 கோடியும் ஒதுக்கப்பட உள்ளது

கொரோனா வைரஸை சமாளிக்கத் தேவையான மருத்துவக்கட்டமைப்பை உருவாக்கும் வகையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 50 ஆயிரம் வெண்டிலேட்டர்களை ரூ.2 ஆயிரம் கோடிக்கு வாங்கப்பட உள்ளது. இவ்வாறு வாங்கப்படும் வெண்டிலேட்டர்கள் அனைத்தும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்குப் பயன்பாட்டுக்காக அனுப்பிவைக்கப்படும்.

அடுத்ததாகப் புலம்பெயர் தொழிலாளர்களுக்காகவும், ஏழைகளுக்காகவும் உதவ மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.ஆயிரம் கோடி ஒதுக்கப்பட உள்ளது. இந்நிதியை மாநில, யூனியன் பிரதேச நிர்வாகங்கள் மாவட்ட ஆட்சியர் அல்லது நகராட்சி ஆணையர்கள் மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்குமிடம், உணவு, மருத்துவ வசதி, போக்குவரத்து ஆகியவற்றுக்குப் பயன்படுத்த வேண்டும்.

மாநிலங்களுக்கு  இந்த நிதி 2011-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 50 சதவீதம், கரோனா நோயாளிகள் அளவில் 40 சதவீதம் மற்றும் அனைத்து மாநிலங்களுக்கும் 10 சதவீதம் சரிவிகித பகிர்வு ஆகியவற்றின் அடிப்படையில் பிரித்து வழங்கப்படும். மாநில பேரிடர் நிவாரண ஆணையர் மூலம் மாவட்ட ஆட்சியர் அல்லது நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு இந்த பணம் வழங்கப்பட உள்ளது

அத்துடன், கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் இந்திய விஞ்ஞானிகள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் போன்றவை ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும், மற்றும் அவற்றை ஊக்கப்படுத்த வேண்டும் எனும் நோக்கில் ரூ.100 கோடி வழங்கப்படவுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.