கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவ தொடங்கிய சில வாரங்கள் கழித்து மார்ச் 24-ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே பி.எம். கேர்ஸ் நிதி குறித்த அறிவிப்பு வெளியானது.

27 மார்ச் 2020 அன்று அதிகாரபூர்வமாக தொடங்கப்பட்ட பி.எம்.கேர் நிதிக்கு அதுமுதல் இன்று வரை எவ்வளவு தொகை வந்தது என்பது பற்றியோ அதிலிருந்து எவ்வளவு தொகை செலவழிக்கப்பட்டது என்பது பற்றியோ முறையான அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், இந்த நிதி குறித்து பலரும் பல்வேறு விதமாக சந்தேகங்களை எழுப்பிவந்தனர்.

அனு புயன்

இந்நிலையில், இந்த நிதி குறித்து கடந்த மே மாதம் 20-ம் தேதி செய்தி ஒன்றை வெளியிட்ட சமூக ஊடகவியலாளரும் பத்திரிகையாளருமான அனு புயன் அன்றைய தேதிவரை 9,677 கோடி ரூபாய் நிதி சேர்ந்திருப்பதாகவும், இதில் 4308 கோடி ரூபாய் அரசு ஊழியர்களின் சம்பள பிடித்தம் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் அரசு துறையிடம் இருந்து பெறப்பட்டது என்றும்.

மீதம் ரூபாய் 5369 கோடி சமூக சேவை அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினரிடம் இருந்து பெறப்பட்டது என்றும், இவை பத்திரிகைகளில் வந்த பல்வேறு தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட கணக்கு என்றும் கூறியிருந்தது. அதேவேளையில், இந்த தொகை மேலும் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் தெரிவித்திருந்தது.

https://twitter.com/AnooBhu/status/1338763403972657152

இதனை தொடர்ந்து அனு புயன் இன்று தனது ட்விட்டரில், பி.எம்.கேர்ஸ் அறக்கட்டளை தொடர்பான ஆவணங்கள் இவை என்ற குறிப்புடன் ஆவணங்களின் சில பக்கங்களை இணைத்து அந்த ட்வீடில் பதிவிட்டுள்ளார்.

பி.எம்.கேர்ஸ் அறக்கட்டளை இந்திய அரசியலமைப்பு சட்டப்படி உருவாக்கப் படவில்லை என்றும், இது பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற விதிகளின் கீழ் வரவில்லையென்றும், அதேபோல் மத்திய மாநில அரசின் கட்டுப்பாட்டிலும் இல்லையென்றும் குறிப்பிட்டிருக்கிறது.

பிரதம மந்திரி என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கும் இந்த அறக்கட்டளை, தனது நன்கொடைகள் பற்றிய விவரங்களை வெளியிட அவசியமில்லை என்று அதன் சரத்துகளில் உள்ளது. மேலும், இந்த அறக்கட்டளையின் லோகோ / சின்னம் போன்றவற்றை அவர்கள் சுயமாக தீர்மானிக்கவும் வழிவகை செய்துள்ளது.

அதுமட்டுமன்றி, இந்த அறக்கட்டளையை கலைப்பதற்கும் இதில் உள்ள நிதியை வேறு ஏதாவது ஒரு அறக்கட்டளையின் கணக்கில் மாற்றம் செய்யவும் அதிகாரம் வழங்கி இருக்கிறது.

பல்வேறு சர்ச்சைக்குரிய சரத்துகளோடு நாட்டு மக்களின் பணத்தை கொண்டு தொடங்கப்பட்டுள்ள பி.எம்.கேர்ஸ்

  • அரசு அமைப்பு சட்டத்தின் கீழ் வராத ஒரு நிறுவனம், தேசிய சின்னத்தையும், .gov.in என்ற இணையதள அடையாளத்தையும் எந்த அடிப்படையில் பயன்படுத்துகிறது ?
  • இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பிரதமர் கேர்ஸ் குறித்த வழக்குகளை எதிர்த்து நீதிமன்றத்தில் வாதாடுவது எதற்காக ?
  • பிரதம மந்திரி என்ற அதிகாரபூர்வ அடையாளத்தை எதற்காக பயன்படுத்தி இருக்கிறார்கள் ?
  • தணிக்கைக்கோ, தகவலறியும் உரிமை சட்டத்திற்கோ செவிசாய்க்காமல் இருப்பது ஏன் ?

என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.