புதுடெல்லி:

மத்திய அரசின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் இதுவரை 40 % பேருக்கு மட்டுமே இழப்பீடு தரப்பட்டுள்ளது.

தகவல் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சகம் அளித்த பதிலில், பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட காலத்துக்குள் ரூ 5,000 கோடி இழப்பீடு தொகையை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தரவில்லை என்ற விவரம் தெரியவந்துள்ளது.

இதில் இன்சூன்ஸ் நிறுவனங்கள் பெற்ற பிரீமியம் ரூ. 20,747 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

மாநில அரசுகள் சான்றளித்த 5,171 கோடி இழப்பீடு தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் தரவில்லை.

மே 10- ம் தேதி வரை ரூ. 12,867 கோடி இழப்பீட்டுத் தொகையை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தரவில்லை.

10 % மழை பற்றாக்குறை உள்ள வறட்சி பாதித்த பகுதிகளிலும் பயிர் இழப்பீடு தொகையை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கவில்லை.

இந்தியாவில் பெரும்பாலான பயிர் இழப்பு நிகழ்வதற்கு குறைந்த அளவிலான மழையே காரணம். 65 சதவீத விவசாய பகுதிகளில் மழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என சமீபத்திய தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

ஏற்கெனவே, 7 மாநிலங்கள் தங்களை வறட்சி மாநிலமாக அறிவித்துக் கொண்டுள்ளன. ஏறத்தாழ ஒன்றரை கோடி ஹெக்டேர் பயிர்கள் கருகிவிட்டன.

கடந்த 2018 ஜுன் மற்றும் செப்டம்பர் காலகட்டத்தில் நாட்டில் உள்ள 252 மாவட்டங்களில் மழை அளவு குறைவாக இருப்பதாக மக்களவையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆந்திரா, பீகார், குஜராத்,ஜார்கண்ட், கர்நாடகா,மகாராஷ்ட்ரா,மத்திய பிரதேசம்,ராஜஸ்தான்,தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் வட கிழக்கு மாநிலங்களின் குறிப்பிட்ட பகுதிகளும் இதில் அடங்கும்.

இந்த மாநிலங்களில் பெருமளவு பயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 401 கிராமங்களில், 33% பயிர்கள் கருகிவிட்டன. 269 கிராமங்களில் 50 சதவீதத்துக்கு அதிகமான பயிர்கள் கருகிவிட்டன.

மகாராஷ்டிராவில் 60%-70% சோயா ஞபீன்ஸ் போன்ற பயிர்கள் கருகிவிட்டன. காட்டன் பயிர்கள் 50% வரை கருகிவிட்டன. இங்கு நிலைமை மோசமாக இருப்பதாக மத்திய விவசாய அமைச்சக அதிகாரிகள் கூறுகின்றனர்.

வசூலிக்கப்பட்ட பிரீமியத்துக்கும், கோரப்பட்ட இழப்பீட்டுக்கும் இடையே வித்தியாசம் இருப்பதே பெரிய பிரச்சினையாக உள்ளது. பணம் எங்கே போனது என்பதை விளக்க வேண்டிய நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில், மத்திய அரசு இது தொடர்பாக நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்ட வழிகாட்டுதலில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இழப்பீட்டை தாமதமாக கொடுத்தால், 12 % வட்டியுடன் சேர்த்து இழப்பீட்டு தொகையை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கும் வகையில் வழிகாட்டு விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதனை தீவிரமாக செயல்படுத்தும் பட்சத்தில், பயிர் இழப்பீடு தொகை விவசாயிகளுக்கு விரைந்து கிடைக்க வழி ஏற்படும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.