ராஞ்சி

தேசிய ஊரடங்கு பற்றி பிரதமர் மோடி மாநில முதல்வர்களைக் கேட்கவில்லை என ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பிரதமர் மோடி 21 நாட்கள் தேசிய ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளார்.  கடந்த 24 ஆம் தேதி நள்ளிரவு முதல் தொடங்கிய இந்த ஊரடங்கு வரும் 14 ஆம் தேதி வரை அமல்படுத்த உள்ளது.  இன்று 14 ஆம் நாளாகும்.

இந்தியாவில் மகாராஷ்டிராவில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இரண்டாவதாகத் தமிழகத்தில் அதிக அளவில் பாதிப்பு உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  வறுமையால் பாதிக்கப்பட்டோர் அதிகம் உள்ள இம்மாநிலத்தில் கிராமப்புறங்கள் அதிக அளவில் உள்ளன. சுமார் 3.2 கோடி மக்கள் வசிக்கும் இந்த மாநிலத்தில் ஒவ்வொரு ஊரிலும் குறைந்த அளவில் மக்கள் வசிக்கின்றனர்.

ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் நேற்று செய்தியாளர்களிடம், “கொரோனாவை கட்டுப்படுத்த தேசிய ஊரடங்கை அறிவித்த பிரதமர் இது குறித்து எந்த மாநில முதல்வரையும் கேட்காமல் அவராகவே அறிவித்தார்.  தற்போது தேசிய ஊரடங்கு முடியும் நேரத்தில் ஒவ்வொரு மாநில முதல்வரையும் கருத்துக் கேட்கிறார்.

மத்திய அரசுக்கு இந்த ஊரடங்கை நீட்டிக்கும் எண்ணம் இல்லை என சொல்லப்படுகிறது.  ஆனால் இந்த ஊரடங்கை ரத்து செய்வதால் உயிரிழப்பு ஏற்படாது என்பதை உறுதி செய்த பிறகு மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும்.  எங்கள் மாநிலத்தில் இருந்து சுமார் 6 லட்சம் பேர் வெளி மாநிலங்களில் பணி புரிகின்றனர்.  ஊரடங்கு தளர்த்தப்பட்டால் அனைவரும் திரும்பி வந்து பாதிப்பு அதிகம் ஆகக்கூடும்.

தற்போதைய நிலையில் கொரோனா பரவுதல் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே உண்டாக்குவது அவசியமாகும். ஜார்க்கண்ட் மாநிலத்தில் 80%க்கும் மேற்பட்டோர் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர்.  அவர்கள் அதிகம் வெளியே வருவதில்லை,  மேலும் மக்கள் தொகையும் குறைவு. எனவே எங்கள் மாநிலத்தில் பாதிப்பு தற்போது அதிகரிக்காது” எனக் கூறி உள்ளார்.