நிதித்துறையை நிர்வகிப்பது நிர்மலா சீதாராமனா? பிரதமரா?: ஊடகச்  செய்தி

டில்லி

நிதித்துறையைப் பிரதமர் நிர்வகிப்பதாகவும் நிர்மலா  சீதாராமன் டம்மியாக உள்ளதாகவும் நேஷனல் ஹெரால்ட் செய்தி ஊடகம் கூறி உள்ளது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பெரும்பான்மை பெற்று இரண்டாம் முறையாக மோடியின் ஆட்சி தொடக்கி உள்ளது. முந்தைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு பதில் நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராகி உள்ளார். இந்நிலையில் நிதிச் செயலரான சுபாஷ் சந்திர கர்க் திடீரென இட மாற்றம் செய்யப்பட்டார். இட மாற்றம் செய்யப்பட்ட அடுத்த நாள் அவர் தாம் விருப்ப ஓய்வில் செல்ல விரும்புவதாகத் தகவல்கள் வெளியாகின. கர்க் மற்றும் பிரதமர் அலுவலகத்துக்கு இடையே அதிருப்தி நிலவுவதால் அவர் இடமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து செய்தி ஊடகமான நேஷனல் ஹெரால்ட் வெளியிட்டுள்ள தகவலில், “தற்போது நிதிச் செயலர் கர்க் இடமாற்றம் செய்ததில் இருந்தே நிதித்துறை பிரதமர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது தெளிவாகி உள்ளது. இந்த முடிவை எடுத்தது நிர்மலா சீதாராமன் இல்லை எனவும் அவருடைய இடமாற்றத்துக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவருடைய எதிர்ப்பை கண்டு கொள்ளாமல் கர்க் இடமாற்றம் செய்யப்படுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது நிதி அமைச்சகத்தில் அமைச்சருக்கு அதிகாரம் இல்லாத நிலையால் தினசரிப் பணிகளில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அத்துடன் கடந்த ஜூலை 25 ஆம் தேதி அன்று நடைபெற இருந்த ஜிஎஸ்டி கூட்டம் இறுதி நேரத்தில் காரணமின்றி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஜிஎஸ்டி கூட்டம் ரத்து செய்யப்பட்டதில்லை. இதன் மூலம் தினசரி பணிகள் குறித்து எவ்வித சரியான திட்டமிடுதலும் இல்லாத நிலை நிதி அமைச்சகத்தில் உருவாகி உள்ளது.

ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சராக நிர்மலா சீதாராமன் பணி புரிந்த போது அவருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என பல அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்போது நிதி அமைச்சராகப் பதவி ஏற்றுள்ள நிலையில் மோடி அரசால் நிர்மலா சீதாராமன் ஒரு ரப்பர் ஸ்டாம்பாக பயன்படுத்தப்பட்டு  வருவதாக விஷயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுபாஷ் சந்திர கர்க் முன்பு அரசு நிதி பல தேவையற்ற திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்வதை எதிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது தேர்தலின் போது அதிகரித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது எனவே கர்க் இடமாற்றம் என்பது தேர்தல் முடிவுகளுக்கு முன்பே தீர்மானிக்கப்பட்டதாகும் அத்துடன் கர்க் டாலர் மதிப்பிழப்பு பத்திரங்கள் குறித்த அரசு முடிவைக் கடுமையாக எதிர்த்ததும் இந்த முடிவுக்கு முக்கிய காரணமாகும்.

முன்னாள் நிதி அமைச்சர்  அருண் ஜெட்லியின் அபிமானத்தைப் பெற்றவராக கர்க் இருந்தார். அருண் ஜெட்லி கர்க்குக்கு சுயமாக முடிவெடுக்கப் பல முறை அனுமதி அளித்துள்ளார். எனவே ஜெட்லியின் செல்லப்பிள்ளையாக கர்க் இருந்துள்ளார். அவரை வெளியேற்ற ஜெட்லி ஒப்புதல் அளிக்க மாட்டார் என்பதால் நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்ற பிறகு கர்க் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். “ என குறிப்பிடப்பட்டுள்ளது.