சமாஜ்வாதி கட்சியின் திட்டம் புதிய பெயரில் பிரதமரால் அறிமுகம் : அகிலேஷ் யாதவ்

க்னோ

பிரதமர் மோடி தொடங்கி  வைத்த பூர்வாஞ்சல் அதிவேக நெடுஞ்சாலை திட்டம் சமாஜ்வாதி கட்சியின் திட்டம் என அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் முந்தைய ஆளும் கட்சியான சமாஜ்வாதி கட்சி பல திட்டங்களை அறிவித்தது.   அதில் ஒன்று சமாஜ்வாதி பூர்வாஞ்சல் அதிவேக  நெடுஞ்சாலை திட்டம் ஆகும்.  இந்த திட்டம் கடந்த 2016ஆம் வருடம் டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட திட்டம் ஆகும்.   அந்த சமயத்தில் இந்த சாலை அமைக்க நிலத்தை கையகப்படுத்த இந்தக் கட்சி தலைவர்கள் ஊர் ஊராக சென்று கூட்டம் நடத்தி நிலத்தை கையகப் படுத்தினர்.

இவ்வாறு லக்னோ, பார்பன்கி, ஃபைசாபத், அம்பேத்கார் நகர், அமேதி மற்றும் காசிப்பூரில் உள்ள விவசாயிகளுடன் கலந்துரையாடி  அவர்களை நிலம் அளிக்க சமாஜ்வாதி கட்சி தலைவர்கள் சம்மதிக்க வைத்தனர்.    இந்த திட்டம் நேற்று பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கபட்டுள்ளது.  இதற்கு பூர்வாஞ்சல் அதிவேக நெடுஞ்சாலை திட்டம் என  பெயரிடப்பட்டுள்ளது.

இதை ஒட்டி சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், “பாஜக சொந்தமாக சொல்லிக் கொள்ளும்படி எந்த ஒரு திட்டமும் இல்லை.   அதனால் சமாஜ்வாதி கட்சிகளின் திட்டங்களை பெயரை மாற்றி தங்களுடைய திட்டமாக தொடங்கி வைக்கின்றனர்.   யோகி ஆதித்யநாத் எங்களின் திட்டத்தில் உள்ள சமாஜ்வாதி என்னும் பெயரை நீக்கி விட்டு புதிய திட்டமாக்கி விட்டார்.    இதை நினைவில் கொள்ளாத பாஜகவுக்கு நான் நினைவு படுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.