சென்னை: தமிழகத்தில் விவசாயிகளுக்கான பிரதான்மந்திரி கிசான் யோஜனதா திட்டத்தில், தமிழகத்தில் ஏராளமான முறைகேடு நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரித்து போலி பயனர்களை நீக்கி, முறைகேடாக பெற்ற பணத்தை வசூலிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 11,200 போலி பயனர்கள் சேர்க்கப்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து ரூ.4.48 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

விவசாயிகள் பயன்பெறும் வகையில் கடந்த 2018-ம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டது பிரதமரின் கிசான் நிதியுதவித் திட்டம். இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.6 ஆயிரம் 3 தவணைகளாக வரவு வைக்கப்படும். இடையில் இத்திட்டத்தில் ஆன்லைன் மூலமும் பயனாளிகள் சேரலாம் என்று தளர்வு அளிக்கப்பட்டது.

ஆனால் முறைகேடு குறித்து எழுந்த புகாரினைத் தொடர்ந்து, தமிழக வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ,  13 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி, போலி பயனர்களை நீக்கி பணத்தை வசூல் செய்யும்படி அதிரடி உத்தரவிட்டார்.

இந்த நிலையில்,  விழுப்புரம் மாவட்டத்தில் பிரதமரின் கிசான் நிதியுதவித் திட்ட மோசடியில் 11,200 போலி பயனாளிகளிடம் இருந்து ரூ.4.48 கோடி பறிமுதல் செய்யப்பட்டு, அரசின் கணக்கில் அந்த நிதி சேர்க்கப்பட்டுள்ளதாக வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் இந்த மோசடியில் ஈடுபட்ட 2 வட்டார வேளாண் அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒப்பந்த ஊழியர்கள் 3 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.  ஒப்பந்த ஊழியர்கள் மீதான வழக்கு சிபிசிஐடி போலீஸாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டு அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த மோசடி சம்பவம் தொடர்பாக, தகவல் அறிந்து பலர் தாமாகவே வட்டார வேளாண் மையங் களை அணுகி தங்கள் பணத்தை திரும்ப வங்கிகளில் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் லட்சக்கணக்கானோர் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.