பிரசவ நிதியுதவித் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் ரூ. 6,966 கோடி நிர்வாகச் செலவுக்கு மாற்றம்

புதுடெல்லி:

பிரதமரின் பிரசவ உதவி திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் ரூ. 6,966 கோடி  நிர்வாகத்துக்காக செலவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தி வயர் இணையம் வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையின் விவரம் வருமாறு:

அரசின் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதற்கும், அது ஏன் தோல்வியடைகிறது என்பதற்கும் பிரதமரின் பிரசவ நிதியுதவி திட்டமே சான்று.

புதிய மொத்தையில் பழைய கள் என்பது போல, திட்டத்தின் பெயர் தான் மாற்றப்பட்டுள்ளது. ஆனால் தேசிய அளவில் இந்த திட்டம் செயல்படுத்தும் போது பெரும் முறைகேடு நடந்துள்ளது.

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கடந்தும் சத்துணவு குறைபாடு மற்றும் இரத்த சோகையால் பெண்கள் பாதிக்கப்படுவது இன்னும் தொடர்கிறது.

ஊட்டச்சத்து இல்லாத பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் நலிவடைந்தே பிறக்கின்றன.கடந்த 1990-ம் ஆண்டுதான் இதை மத்திய அரசு கண்டறிந்தது. குறிப்பாக, ஏழை பெண்கள், அமைப்புசாரா பெண் தொழிலாளர்கள் ஊட்டச்சத்துக் குறைவால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து, மாத்ரித்வ லாப் யோச்னா என்ற பிரசவ நிதியுதவி திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன்படி, கர்ப்பிணி பெண்களுக்கு இரண்டு கட்டமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

கர்ப்பமானவுடனேயே பதிவு செய்யப்பட்டு ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். குழந்தை பிறந்த பின் மீதமுள்ள ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.அதன்பின்னர் இந்த திட்டத்துக்கு இந்திரா காந்தி மாத்ரித்வ சஹ்யோக் யோச்னா என் பெயரிடப்பட்டு, 53 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது.

மோடி அரசு பதவியேற்ற பின், இந்த திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. பிரதமரின் மாத்ரு வந்தனா யோச்னா என்று பெயரிடப்பட்டது.

பிரசவ நிதியுதவி தொகை ரூ.6 யிரத்திலிருந்து ரூ.5 ஆயிரமாக குறைக்கப்பட்டு 3 தவணைகளாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.ஓராண்டில் 2% பேர் மட்டுமே பயனடைந்தனர்.

இதனையடுத்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபோது அதிர்ச்சியாக இருந்தது.2018 நவம்பர் 30&ம் தேதி வரை 18 லட்சத்து 82 ஆயிரத்து 708 பேருக்கு ரூ. 1,655.83 கோடி வழங்கப்பட்டது.

எனினும், இந்த திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் ரூ.6,966 கோடி நிர்வாக செலவினங்களுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த திட்டத்தின் மூலம் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் வரை, ஒடிஷாவில் 5 பேர் மட்டுமே பயன்பெற்றுள்ளனர். அவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் ரூ.274 கோடிக்கு மேலாக நிர்வாக செலவினங்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தால் கர்ப்பிணி பெண்களுக்கு பலன் கிடைக்கவில்லை. வறட்சி என்றாலோ, வெள்ளம் என்றாலோ எப்படி அதிகாரிகள் கைக்கு பணம் சென்று விடுகிறதோ, அதே நிலைதான் இந்த திட்டத்துக்கும் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு தி வயர் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.