வாஜ்பாய்  உருவப்படத்துடன் 100 ரூபாய் நாணயம்: மோடி வெளியிட்டார்

டில்லி:

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்  உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம்  இனறு வெளியிடப்பட்டது. பிரதமர் மோடி, ரூ.100 நாணயத்தை வெளியிட்டார்.

நாளை முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, வாஜ்பாய்  உருவம் பொறித்த புதிய ரூ. 100 நாணயத்தை இன்று வெளியிட்டார்.

ஏற்கனவே வாஜ்பாய் உருவம் பொறித்த  100 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 13ந்தேதி அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த  நிலையில் இன்று புதிய ரூ.100 நாணயம் வெளியிடப்பட்டது.

இந்த 100 ரூபாய் நாயணம் 35 கிராம் எடையுடன், ஸ்ரீஅடல் பிகாரி வாஜ்பாய் என்ற பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது.   இந்த ரூ. 100 நாணயத்தின் ஒரு பக்கத்தில் வாஜ்பாய் உருவமும், அதற்கு கீழ் அவரது பெயர் தேவநகரி மற்றும் ஆங்கிலத்தில் இடம்பெற்றுள்ளது.

நாணயத்தின் மறுபுறத்தில்  சிங்கத்தின் சின்னமும், அதற்கு கீழ் ரூ. 100 குறியீடும், சத்யமேவ ஜெயதே என்ற வார்த்தைகள் தேவநாகரி எழுத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த நாணயம் வெள்ளி, செம்பு, நிக்கல், துத்தநாகம் ஆகிய உலோகங்களால் செய்யப்பட்டுள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டில்லியில் நடைபெற்ற விழாவில்,  ரூ. 100 நாணயத்தை பிரதமர் வெளியிட்டார். விழாவில் பாஜக மூத்த  தலைவர் அத்வானி, பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, நிதியமைச்சர் அருண் ஜெட்லி உள்பட அமைச்சர்கள், அதிகாரிகள் , பாஜக நிர்வாகி கள் கலந்துகொண்டனர்.