புதுடெல்லி:

கர்தார்பூர் நடைபாதை பணியை விரைந்து முடித்து ஆண்டு முழுவதும் திறந்துவைக்க வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


சீக்கியர்களின் நம்பிக்கை நிறுவனர் குரு நானக் கடைசியாக வாழ்ந்த இடம் கர்தார்பூர். கர்தார்பூர் பாகிஸ்தானின் நரோவல் மாவட்டத்தில் ராவி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் எல்லையை இணைக்கும் இடத்தில் நடைபாதை அமைக்க இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து முடிவு செய்தன.

அட்டாரி-வாகா எல்லையிலிருந்து நடைபாதையை இந்திய தரப்பு தொடங்குவது என இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இரு நாடுகளின் தொழில்நுட்ப நிபுணர்கள் சந்தித்து நடைபாதை அமைப்பது குறித்த விவாதித்தனர்.

எனினும், கர்தார்பூர் நடைபாதை திட்டத்தை நிறைவேற்ற அமைக்கப்பட்ட கமிட்டிக்கு காலிஸ்தானிய பிரிவினைவாதி தலைமை ஏற்பதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

இதனால் இந்த திட்டத்தை இந்தியா தள்ளிப்போட்டது. மீண்டும் மே 27-ம் தேதி இரு நாட்டு அதிகாரிகளும் கர்தார்பூர் நடைபாதை அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.

துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ஆகியோர் கர்தார்பூர் நடைபாதை அமைக்க குர்தாஸ்பூர் மாவட்டத்தில் அடிக்கல் நாட்டினர்.

2 நாட்கள் கழித்து, லாகூரிலிருந்து 125 கி.மீ. தொலைவில் உள்ள நரோவல் என்ற இடத்தில் கர்தார்பூர் நடைபாதைக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அடிக்கல் நாட்டினார்.

இது தொடர்பாக கடந்த 12-ம் தேதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு பிரதமர் மோடி அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், ஆண்டு முழுவதும் செயல்படும் வகையில் கர்தார்பூர் நடைபாதையின் பணி முடிவடைய வேண்டும். இந்த பணியை விரைந்து முடிக்க நாம் இணைந்து பணியாற்றுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்துப் பேசிய இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார், தொழில்நுட்ப ரீதியிலான 3 ஆலோசனை கூட்டங்கள் நடத்த வேண்டியுள்ளது.

மேலும், பாகிஸ்தானிடமிருந்து சில விளக்கங்களை கேட்டுப் பெற வேண்டியுள்ளது. அவர்களது விளக்கத்துக்காக காத்திருக்கின்றோம் என்றார்.