‘சுவிட் எடு கொண்டாடு’: ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய மோடி!

தீபாவளியை முன்னிட்டு உத்தரகாண்ட் மாநிலம் ஹர்சில் எல்லைப் பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுடன்  பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடினார். அப்போது ராணுவ வீரர்களுக்கு இனிப்புகள் ஊட்டி மகிழ்ச்சியை தெரிவித்தார்.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று தென்னிந்தியாவில் கொண்டாடப்பட்ட  நிலையில் இன்று வட இந்தியாவில் தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தீபாவளியை கொண்டாடும் நோக்கில் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள்  இன்று  கேதர்நாத் சென்றுள்ளனர். அங்குள்ள கேதர்நாத் கோவிலில்  வழிபாடு நடத்திய பின்னர்  ஹர்சில் பகுதியில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

அப்போது ராணுவ வீரர்களுக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ந்தார். அப்போது பேசிய மோடி,  நீங்கள் இந்த நாட்டின் மீது வைத்திருக்கும் பற்றினால் தான் 125 கோடி இந்தியர்களின் கனவு மற்றும் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கிறது” என்று கூறினார்.

ஏற்கனவே  2014ம் ஆண்டு சியாச்சினில் உள்ள ராணுவ முகாமுக்கு வருகை தந்த மோடி, உலகின் மிக உயரமான போர்ப் பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.

2015ம் ஆண்டு அமிர்தசரஸில் உள்ள காஸாவில் டோக்ராய் போர் நினைவிடத்தில் வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினார்.

2016 ம் ஆண்டு இமாச்சலில், இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினார்.

2017 ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திப்போராவில் உள்ள பிஎஸ்எஃப் படை வீரர்களுடன் தீபாவளிப் பண்டிகையை பிரதமர் நரேந்திர மோடி கொண்டாடினார்.

இந்த நிலையில் இந்த ஆண்டு (2018) உத்தரகாண்ட் மாநிலம் ஹர்சில் எல்லைப் பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுடன்  பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடி உள்ளார்.

மோடியின் இந்த செயல் ராணுவ வீரர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.