காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோரா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்..!

டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான மோதிலால் வோரா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றில் இருந்து மீண்ட வோரா நுரையீரல் தொற்று, சிறுநீரகப் பிரச்னை காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

2002 முதல் 2018 வரை 16 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் பொருளாராக இருந்தவர். உத்தரபிரதேசத்தின் முன்னாள் ஆளுநராகவும் இருந்து உள்ளார். அவரது மறைவிற்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடியும் தமது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: அரசியல் வாழ்க்கையில் பரந்த நிர்வாக அனுபவங்களைக் கொண்டிருந்தவர் மூத்த தலைவர் வோரா. அவரது மறைவு வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், நலம் விரும்பிகளுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள், ஓம்சாந்தி என்று குறிப்பிட்டு உள்ளார்.