பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதமும், மான் கி பாத் என்ற நிகழ்ச்சி மூலம் வானொலியில் பேசிவருவது போல், ஒவ்வோர் ஆண்டும், மாணவர்களுக்கு பரிட்சையை எதிர்கொள்ள அறிவுரை வழங்கும் ‘பரிக்ஷ பெ சர்ச்சா’ என்ற தலைப்பில் பேசி வருகிறார்.

இந்த ஆண்டுக்கான பிரதமர் மோடியின் பரிக்ஷ பெ சர்ச்சா பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்கள் தேர்வு எழுத தொடங்கியதும் முதலில் கடினமான கேள்விகளுக்கு பதிலளியுங்கள், பின்னர் சுலபமான கேள்விக்கு செல்லலாம் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார்.

இதுகாலம் வரை, ஆசிரியர்களும் பெற்றோர்களும், தேர்வு எழுத தொடங்கியதும், சுலபமான கேள்விகளுக்கு முதலில் பதிலளித்துவிட்டு, கடினமான கேள்விகளுக்கு இறுதியில் பதிலெழுதுங்கள் என்று கூறிவந்த நிலையில், பிரதமர் மோடியின் இந்த புதிய அணுகுமுறை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தான், காலையில் தூங்கி எழுந்திருக்கும் போது புத்துணர்ச்சியுடன் இருப்பதால் அந்த நாளுக்கான பணியில் எது மிக கடினமாக இருக்குமோ அதை முதலில் தேர்ந்தெடுத்து செய்வதாகவும், அதனால் மாணவர்களும் புத்துணர்ச்சியுடன் இருக்கும் போது சவாலான கேள்வியில் இருந்து தொடங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் என்று அனைத்து தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பியதால் பிரதமர் மோடி மற்றும் செய்தி தகவல் துறை ஆகியவற்றின் ட்விட்டர் பதிவில் இருந்து இந்த சர்ச்சை பதிவை நீக்கி இருக்கிறார்கள்.

ஏற்கனவே, கொரோனா தொற்று காரணமாக கடந்த ஓராண்டாக இணைய வசதி இல்லாத இடங்களில் உள்ள மாணவர்களின் படிப்பு குறிப்பாக கிராமப்புற, மலைகிராம மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியாகி இருக்கும் நிலையில், அவர்கள் ஆண்டு முழுவதும் கடைபிடித்து வந்த பரிட்சை எழுதும் முறையை, பரிட்சை நேரத்தில் மாற்றிக்கொள்ள வலியுறுத்துவதும், பரிட்சை நேரத்தில் அவர்களுக்கு வாழ்த்து கூறாமல் அறிவுரை வழங்குவதும் என்ன பலனை ஏற்படுத்தும் என்று சமூக வலைத்தளங்களில் கேள்வியெழுப்பி வருகின்றனர்.