“அண்ணன்” மோடிக்கு ஜே..! : ரங்கராஜ் பாண்டேவின் பேச்சை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்

“பிரதமர் மோடி மார்க்கெட்டிங்கில் சிறந்தவர். அவரது ராஜதந்திரத்தால் அமெரிக்கர்கள், இந்தியர்களைப் பார்த்து பயப்படுகிறார்கள்” என்று ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே பேசியதை சமூகவலைதளங்களில் பலரும் கேலி செய்து வருகிறார்கள்.

தந்தி தொலைக்காட்சியில் தலைமை செய்தியாளராக பொறுப்பு வகித்த ரங்கராஜ் பாண்டே சமீபத்தில் அந்த பொறுப்பில் இருந்து விலகினார்.

 

அவர் அப்பொறுப்பில் இருக்கும்போதே “பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார்” என்ற ஒரு விமர்சனம் இருந்தது. ஆனால் அதை ரங்கராஜ் பாண்டே மறுத்துவந்தார்.

இந்த நிலையில் அவர் பேசிய வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. அதில், “அண்ணன்பிரதமர் மோடி மார்க்கெட்டிங்கில் சிறந்தவர். அவர் ஏதோ விடுமுறைக்காக வெளிநாடு டூர் போவதாக பலர் விமர்சிக்கிறார்கள். ராத்திரி பகல் தூங்காமல் ராஜதந்திரத்துடன் செயல்பட்டு இந்தியாவின் மதிப்பை உலக அரங்கில் உயர்த்தியிருக்கிறார். இப்போது இந்தியர்களைப் பார்த்து அமெரிக்கர்கள் பயப்படுகிறார்கள். இன்னொரு நாட்டின் (பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர்) மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதல் நடத்தினார். அதை உலகில் யாரும் எதிர்க்கவில்லை. நாற்பது ஆண்டுகளில் சாதிக்க முடியாததை நான்கே ஆண்டில் சாதித்து முடித்திருக்கிறார் மோடி” என்று பேசியிருக்கிறார்.

அவரது பேச்சை சமூகவலைதளங்களில் பலரும் கிண்டல் செய்து பதிவிட்டு வருகிறார்கள்.

அவற்றில் சில பதிவுகள்:

“பாண்டே தமிழ்நாட்டு சங்கிகளுக்கு அண்ணனின் தம்பியாலாம்னு பாக்கிறீர்களா?”

“பாண்டே” எல்லாம் பிரச்சாரம் பண்ணுனா மோடி மறுபடியும் பிரதமர் ஆயிடுவாருன்னு யாரோ கிளப்பி விட்டு, அதையும் நம்பி இருக்காங்க பாருங்க! .

பிஜேபி நிலைமை அவ்வளவு மோசமாவா இருக்கு “ என்றெல்லாம் கேலியாக பதிவிட்டு வருகிறார்கள்.

அதே போல, “இந்திய ராணுவம் சர்ஜிகல் ஸ்டிரைக் தாக்குதல் நடத்திய பகுதியை இன்னொரு நாடு என்கிறார் பாண்டே. ஆனால் அதை பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி என்றுதான் இந்திய அரசு குறிப்பிடுகிறது. அதாவது இந்திய பகுதி என்று சொல்கிறது. ஆக இந்திய பகுதியை இன்னொரு நாடு என்கிறார்  பாண்டே. இது தேசத்துரோகம் இல்லையா” என்றும் சிலர் பதிவிட்டு வருகிறார்கள்.