டில்லி,

குறைந்த கட்டணத்தில் உள்நாட்டு விமான சேவை வழங்கும் உதான் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

உள்நாட்டு விமான சேவையை விரிவுப்படுத்தும் விதமாக மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் வடிவமைத்துள்ள இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 128 புதிய வழித்தடங்கலில் விமான சேவைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் ஒரு மணி நேர பயணத்திற்கு அல்லது அதிகபட்சம் 500 கிலோமீட்டர் தூரத்திற்கு 2,500 ரூபாய் என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர் சேவைகளும் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளன. உதான் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக நாடெங்கிலும் பல்வேறு இடங்களில் புதிய விமான நிலையங்களை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உதான் திட்டத்தின் கீழ் புதிய வழித்தடங்களில் விமான சேவைகளை வழங்குவதற்கான உரிமம் ஏலத்தின் அடிப்படையில் சமீபத்தில் 5 விமான நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.

பிரதமர் மோடி இந்த திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்.

இமாச்சல் பிரதேச மாநிலம் ஷிம்லாவிலிருந்து டில்லி செல்லும் விமானம் மற்றும் ஆந்திர மாநிலம் கடப்பாவிலிருந்து ஹைதராபாத் செல்லும் விமானங்களின் பயணத்தை கொடி அசைத்து பிரதமர் தொடங்கி வைத்தார்.

ஏற்கனவே மத்திய அரசு பாராளுமன்றத்தில் அறிவித்துள்ள 128 வழித்தடங்களில்  தமிழகத்தில் தற்போது செயல்படாமல் இருக்கும் சேலம் விமான நிலையம் ஒன்று.

மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதி காரணமா  சேலம் விமான நிலையம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு அடுத்த கட்டமாக விமான சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேலம் விமான சேவை தொடங்கினால் குறைந்த கட்டணத்தில் சேலத்திலிருந்து பெங்களூர் மற்றும் சென்னைக்கு பயணம் மிகவும் எளிதாகும்.

சேலத்திலிருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு விமான சேவை ஏற்படுத்தப்படும் என்று ஏற்கனவே  பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழக முதல்வரும், தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களும் குரல் கொடுத்தால், விரைவில் சேலம் விமான நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என்பதில் ஐயமில்லை..