போபால்: மின்தேவையில் தன்னிறைவு அடைவதுதான் தற்சார்பு இந்தியாவிற்கு அவசியமான ஒன்று என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
மத்திய பிரதேசத்தில் உள்ள ரேவா நகரில் 750 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட சூரிய மின்திட்டத்தை பிரதமர் மோடி  இன்று, காணொலி காட்சி வாயிலாக  நாட்டுக்கு அர்ப்பணித்தார்.  இந்த திட்டம் ஆசியாவின் மிகப்பெரிய சூரிய மின் திட்டமாக கருதப்படுகிறது.
1,500 ஹெக்டேர் பரப்பளவில் இந்த பூங்கா  அமைக்கப்பட்டுள்ளது. திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த பின் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: ஆசியாவின் பெரிய சூரிய மின்சக்தி திட்டமும், அதன் அடையாளங்களில் ஒன்றாகவும் ரேவா மாறியுள்ளது.

அதனை தவிர்த்து, ஷனாபூர், நீமூச், சதார்பூர் ஆகிய இடங்களில் சூரிய மின் சக்தி திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. சுத்தமான, பாதுகாப்பானது என்பதால், 21ம் நூற்றாண்டிற்கான தேவையாக சூரியமின்சக்தி உள்ளது.
சூரிய தகடுகள், அதனுடன் தொடர்புடைய சாதனங்களுக்கு மற்ற நாடுகளை சார்ந்திருப்பதை குறைக்கும் பணிகளை துவக்க வேண்டும். சோலார் உபகரணங்கள், பேட்டரிகள் இந்தியாவில் தயாரிக்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.
நாட்டின் வளர்ச்சியின் அதிகரித்து வரும் நிலையில் மின்தேவையும் அதிகரித்து வருகிறது. மின்தேவையில் இந்தியா தன்னிறைவு பெறும். எல்இடி விளக்குகளை பயன்படுத்துவதன் மூலம் மின்தேவை குறைந்து வருகிறது. அதன் மூலம், கார்பன்டைஆக்சைடு மாசு குறையும் என்று பேசினார்.