குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க தென் ஆப்பிரிக்க அதிபருக்கு பிரதமர் மோடி அழைப்பு!

2019ம் ஆண்டு நடைபெற உள்ள 69வது குடியரசு தினவிழாவிற்கு சிறப்பு விருந்திரனராக பங்கேற்க தென் ஆப்பிரிக்க அதிபருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். அர்ஜெண்டினா நாட்டில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் போது தென் ஆப்பிரிக்க அதிபருக்கு மோடி முறையான அழைப்பு விடுத்துள்ளார்.

south

இந்தியாவின் குடியரசு தினவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த குடியரசு தினவிழாவில் பிற நாட்டை சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்கின்றனர். 2016ம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தினவிழாவில் பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹாலெண்டே பங்கேற்றார். 2015ம் ஆண்டு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அதேபோல், 2019ம் ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தின நிகழ்ச்சிக்கு அமெரிக்க அதிபர் பங்கேற்குமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் குடியரசு தின விழாவின் போது அமெரிக்க மாநிலங்கள் பிரதிநிதிகள் கூட்டத்தில் அதிபர் ட்ரம்ப் பங்கேற்பதால் இந்தியா வரமுடியாது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஜி-20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி அர்ஜென்டினா சென்றிருந்தார். அப்போது மாநாட்டின் இடையே தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராம்போசாவைச் சந்தித்து மோடி பேசினார். அப்போது, இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள். அதன்பின்னர் 69வது குடியரசு தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு சிரில் ராம்போசாவிற்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரவிஷ் குமார் கூறுகையில், “ மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்தநாள், தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் 100-வது பிறந்தநாளும் ஒன்றாக வருகிறது. தென் ஆப்பிரிக்க அதிபருக்கு குடியரசு தினவிழாவில் பங்கேற்க இந்திய அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், “ தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராம்போசாவைச் சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை நாடு கொண்டும் வேளையில், 2019-ம் ஆண்டு குடியரசு தின நிகழ்ச்சியில் தென் ஆப்பிரிக்க அதிபர் ராம்போசாவை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க அவரை வரவேற்பது நமக்குக் கவுரமாகும். மகாத்மா காந்திக்கும், தென் ஆப்பிரிக்காவுக்கும் இடையே நட்பு இருந்தது அனைவருக்கும் தெரிந்ததே ” எனத் தெரிவித்துள்ளார்.