மும்பை

பிரபல பாலிவுட் நடிகரான நசிருதீன் ஷா மாணவரகளை எதிர்க்கும் பிரதமர் மோடிக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகரான நசிருதீன் ஷா பல விருதுகள் பெற்ற பாலிவுட் நடிகர் ஆவார்.  இவர் தனது கருத்துக்களை தைரியமாகத் தெரிவிக்கக் கூடியவர்களில் ஒருவரும் ஆவார்.   இவருடைய குடும்பத்தில் பலர் ராணுவம், அரசு நிர்வாகம் எனப் பணி புரிந்துள்ளனர்.   அவர் தாம் ஒரு இஸ்லாமியர் என்பது ஒரு குறை எனக் கூறியது இல்லை.

சமீபத்தில் தி ஒயர் ஊடகத்துக்கு நசிருதின் ஷா ஒரு பேட்டி அளித்துள்ளார்.  அப்போது அவர், “ நான் 70 ஆண்டு காலம் இங்கு வாழ்ந்தும்  என்னால் முடிந்த பணிகளைச் செய்தும் நான் இந்தியாவில் வசித்ததை என்னால் நிரூபிக்க இயலவில்லை என்றால் நான் என்ன செய்வது என எனக்குத் தெரியவில்லை.  இதனால் நான் பயமோ கவலையோ அடையவில்லை.  கோபம் அடைந்துள்ளேன்.

தற்போது எழுந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை பதிவேடு போன்றவற்றுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.  மக்களிடையே வகுப்புவாதங்களுக்கு எதிராக கடும் எழுச்சி உண்டாகி இருக்கிறது.   ஆயினும் திரைப்படத் துறை பிரபலங்கள் இது குறித்து அமைதியாக உள்ளது ஏன்?

தற்போதைய நிகழ்வுகளுக்கு எதிராக உள்ள இந்திய இளைஞர்களின் எழுச்சி ஆச்சரியமாக உள்ளது.   திரைப்படத்துறையில் உள்ள இளம் நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் இச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.   ஆனால்  பெரிய நடிகர்கள்  இவற்றை எதிர்த்தால் தங்களுக்கு இழப்பு அதிகம் ஏற்படும் என அஞ்சி இருப்பது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை.

பிரதமர் மோடி மாணவர்கள் மற்றும் அறிவுஜீவிகள் மீது கடும் அவமதிப்பைக் காட்டி வருகிறார்.  அவர்  ஒரு போதும் மாணவராக இருந்தது கிடையாது.  எனவே அவருக்கு அவர்கள் மீது இரக்கமோ பச்சாதாபமோ கிடையாது.  ஒரு மாணவராக இருந்திராத பிரதமர் அவர்களை எதிர்ப்பது ஆச்சரியம் கிடையாது.  ஆனால் இந்த வெறுப்பு எங்கிருந்து வந்தது என்பது எனக்கு ஆச்சரியமாகவும்  திகைப்பாகவும் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.