நெருங்கி வரும் சட்டசபை தேர்தல்: அசாமில் ரூ.3,222 கோடி மதிப்பிலான 5 திட்டங்கள் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

கவுகாத்தி: விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள அசாமில் ரூ.3,222 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

எண்ணெய், எரிவாயுத் திட்டம் மற்றும் கல்வி உள்ளிட்ட 5 திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றியதாவது:

மத்தியிலும், அசாம் மாநிலத்திலும் உள்ள பாஜக அரசுகள் இணைந்து மாநிலத்தை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்கின்றன. தொடர்ந்து வளர்ச்சி பாதையில் பயணிக்க மத்திய, மாநில அரசுகள் எனும் 2 என்ஜின்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம்.

அசாமில் ஆளும் அரசு, மாநிலத்தை அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை நோக்கி பயணிக்க வைக்கிறது என்றார். நிகழ்ச்சியில், கட்டி முடிக்கப்பட்ட பொறியியல் கல்லூரியைத் தொடங்கி வைத்தும், புதிய பொறியியல் கல்லூரிக்கு அடிக்கல்லும் அவர் நாட்டினார்.