டுவிட்டரில் ஒரே நாளில் 3 லட்சம் பேரை இழந்தார் மோடி

டில்லி:

டுவிட்டரில் தவறான தகவல்களை பரப்பும் கணக்குகளை கண்காணிக்கவும், முடக்கவும் அதிகமான நபர்கள் பணியமர்த்தப்பட்டனர். இதன் எதிரொலியாக கடந்த மே, ஜூன் மாதத்தில் மட்டும் 7 கோடி போலி கணக்குகள் முடக்கப்பட்டன.

ஒரே நாளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கணக்குகள் முடக்கப்பட்டுள்ள செய்தியு வெளியாகியுள்ளது. ஒரு பிரமுகரை பின் தொடர்ந்து, பின்னர் நிறுத்தி கொண்டவர்களின் கணக்குகளையும், முடக்கப்பட்ட கணக்குகளையும் நீக்கிவிட்டு சரியான எண்ணிக்கையிலான நபர்களை குறிப்பிடும் சீரமைப்பு நடவடிக்கையை டுவிட்டர் மேற்கொண்டது.

இதன் விளைவாக பல நாடுகளை சேர்ந்த அரசியல் பிரமுகர்களும், இதர துறை நட்சத்திரங்களும் இன்று ஒரே நாளில் லட்சக்கணக்கான அபிமானிகளை இழந்துள்ளனர். டுவிட்டரில் 4.34 கோடி அபிமானிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி உலகளவில் 3ம் இடத்தில் இருந்தார். அவர் இன்று 2 லட்சத்து 84 ஆயிரத்து 746 அபிமானிகளை இழந்துள்ளார். இதேபோல் ராகுல் காந்தி 17 ஆயிரம் அபிமானிகளை இழந்தார்.

பிரதமர் மோடி அலுவலக டுவிட்டரும் 1.40 லட்சம் அபிமானிகளை இழந்தது. காங்கிரஸ் தலைவர் சசி தரூர் 1.5 லட்சம் பேரை இழந்துள்ளார். சுஷ்மா சுவராஜ் 74 ஆயிரம் பேரையும், அரவிந்த் கெஜ்ரிவால் 91,555 பேரையும், அமித் ஷா 33,363 பேரையும் இழந்தனர். அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா 4 லட்சம் பேரையும், டொனால்ட் டிரம்ப் 3 லட்சம் பேரையும் இழந்தனர். டுவிட்டர் சி.இ.ஓ. ஜேக் டார்ஸே 2 லட்சம் பேரை இழந்துள்ளார்.