டெல்லி:
பிரதமர் மோடி திடீர் லடாக் லே எல்லை பகுதிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு  ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடி வருகிறார். இது பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

காஷ்மீர் மாநிலம் லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய-சீன வீரா்களுக்கு இடையே ஜூன் 15 தேதி இரவு திடீரென மோதல் ஏற்பட்டது. இதில்20 இந்திய ராணுவ வீரா்கள் வீர மரணமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது. இது தொடர்பாக இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில்,  ராணுவத் தலைமைத் தளபதி எம்.எம். நரவணே எல்லைப் பகுதிகளில் நிலவி வரும் பாதுகாப்பு சூழல் குறித்து ஆய்வு மேற்கொண்டு, ராணுவத்தின் வடக்குப் படைப்பிரிவுத் தளபதி யோகேஷ் குமாா் ஜோஷி, ராணுவத்தின் துணைத் தலைமைத் தளபதி ஹரீந்தா் சிங் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினாா்.
லடாக் எல்லைப் பகுதிகளில் அமைதியை ஏற்படுத்துவது தொடா்பாக இந்தியா-சீனா ராணுவத்தின் உயரதிகாரிகள் இடையே சுமாா் 11 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவாா்த்தையின் முடிவில் எல்லைப் பகுதிகளில் இரு நாடுகளும் தங்கள் படைகளைக் குறைப்பது என்று முடிவெடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத்துடன் லடாக் பகுதிக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார் . அங்குள்ள இந்திய வீரர்களுடன் உரையாடி வருகிறார்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அங்கு செல்ல  இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் பிரதமர் மோடி அங்கு பயணம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.