வேலைவாய்ப்புக்கு ஏற்ப இளைஞர்கள் புதிய திறமையை வளர்த்து கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி அறிவுரை

டெல்லி: வேலைவாய்ப்புக்கு ஏற்ப இளைஞர்கள் புதிய திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

உலக இளைஞர் திறன் தினத்தையொட்டி பிரதமர் மோடி உரையாற்றியதாவது: கொரோனா காலத்தில், நமது பணி கலாசாரம், பணியின் தன்மை ஆகியவை மட்டுமல்ல, எப்போதும் மாறாத தொழில்நுட்பமும் கூட மாறிவிட்டது.

இந்த சவால் மிக்க தருணத்தில், இளைஞர்கள் புதிய திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும். திறமை என்பது, நமக்கு நாமே அளிக்கும் பரிசு. அனுபவம் மூலம் அது கிடைக்கிறது. தனித்துவமிக்க அந்த திறமை மற்றவர்களிடம் இருந்து உங்களை வேறுபடுத்திக்காட்டுகிறது.

அறிவு, திறமை இரண்டையும் சிலர் குழப்பிக் கொள்வார்கள். அவர்களுக்கு நான் சொல்வது, சைக்கிளை ஓட்டுவது எப்படி என்று புத்தகத்தில் படிக்கலாம். இணையத்தில் பார்க்கலாம். அது அறிவு. அதுவே உங்களால் சைக்கிளை ஓட்டிவிட முடியும் என்பதற்கான உத்தரவாதம் அல்ல. அதற்கு, திறமை வேண்டும்.

வேலைவாய்ப்புக்கு ஏற்ப இளைஞர்கள் திறமையை வளர்த்து கொள்ள வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கு ஏற்ப பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணம் சம்பாதிக்க மட்டும் திறமையை வளர்த்து கொள்ளக்கூடாது. ஒரு திறமையான நபர் தனது வாய்ப்புகளை எந்த வகையிலும் விட்டுவிடக்கூடாது என்று கூறினார்.