ஜக்கி வாசுதேவின் குடியுரிமை சட்ட ஆதரவு வீடியோவை டிவிட்டரில் வெளியிட்ட பிரதமர் மோடி

டில்லி

த்குரு ஜக்கி வாசுதேவ் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து விளக்கம் அளித்த வீடியோவை பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நாடெங்கும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கடும் போராட்டம் நடைபெற்று வருகிறது.  அதே வேளையில் பாஜகவினர் இந்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துப் பல பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.  கேரள மாநில சட்டப்பேரவை இன்று கூட்டிய சிறப்புக் கூட்டத்தில் சட்டத்தை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சத்குரு ஜக்கி வாசுதேவ் இந்த குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.  அவருடைய ஈஷா யோகா மையம் சார்பில் நடந்த ஒரு நிகழ்வில் லக்னோவைச் சேர்ந்த ஒரு பெண், “உ.பி.யில் குடியுரிமை சட்டம் தொடர்பாக போராட்டங்கள் நடக்கின்றன. எனக்கு அந்தச் சட்டம் என்ன என்பது குறித்து  குழப்பமாக உள்ளது. உங்கள் கருத்து என்ன?’’ என ஜக்கி வாசுதேவிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு ஜக்கி வாசுதேவ், “ஒரே நாடாக இருந்த இந்தியா, 3 ஆகப் பிரிந்தது.  மற்ற 2 நாடுகள் மத ரீதியாகப் பிரிந்து அது சட்டமாக அங்கு அமல்படுத்தப்பட்டன.  ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்தியா அப்படி மாறவில்லை. இந்தியாவில் எல்லா மதத்தினரும் ஒன்றுதான்.  இந்திய சட்டத்தின் முன் அனைவரும் ஒன்றுதான்.  ஆயிரக்கணக்கானோர் பிரிவினைக்குப் பின்னர் கொல்லப்பட்டனர்.  இங்கு ஆயிரக்கணக்கானோர் திரும்பி வந்தனர். இவ்வாறு  மதரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளானவர்களுக்குமட்டும் குடியுரிமை வழங்க இப்போது சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டம் பல ஆண்டுகளுக்கு முன்னரே வந்திருக்க வேண்டும்.

தேசிய குடிமக்கள் பதிவேடு என்பதை எல்லா நாடுகளும் பின்பற்றுகின்றன.  நம் நாட்டில் தங்கியிருப்பவர் யார் என்பதைப் பதிவு செய்ய வேண்டும். இங்கு வசிக்கும் ஒருவரிடம் பிறந்த இடம், மூதாதையர்கள் பற்றிய விவரங்கள் கேட்கின்றனர். அதாவது  ஆதார், பிறப்பு சான்று, வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை, மற்ற ஆவணங்கள் கேட்கின்றனர்.

இந்த ஆவணங்களில் எதுவும் இல்லை என்றாலும் கூட, உங்களைப் பல ஆண்டுகளாகத் தெரிந்த 3 சாட்சிகளைக் கேட்கிறார்.  ஆனல் இவற்றில் எதுவும் இல்லை என்றால், நீங்கள் யார்? இந்த நாட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விவரங்களை அளிப்பது நமது கடமை ஆகும்.

இச் சட்டம் குறித்த விவரங்களைப் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அரசு தோல்வி அடைந்துவிட்டது என்று நான் கருதுகிறேன்.  குடியுரிமை சட்டம் என்பது இங்குள்ளவர்களை வெளியேற்றுவது என்று தவறான தகவல்களைப் பரப்பிவிட்டனர். தற்போது அந்த மிகப்பெரிய பொய், வானத்து அளவுக்குப் பெரிதாகி உள்ளது” எனப் பதில் அளித்தார்.

இந்த நிகழ்வு வீடியோ பதிவாக்கப்பட்டுள்ளது.  அந்த வீடியோவை பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.  இந்த வீடியோவை இந்தியா சப்போர்ட்ஸ் சிஏஏ என்னும் ஹேஷ்டாக்கின் கீழ் அவர் வெளியிட்டுள்ளார்.  அத்துடன் அவர். “ஜக்கி வாசுதேவின் குடியுரிமை சட்டம் குறித்த தெளிவான விளக்கத்தைக் கேளுங்கள்.” எனவும் பதிந்துள்ளார்.

இந்த வீடியோவை உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.