டில்லி

சீன விவகாரத்தில் பிரதமர் மோடி இனியாவது உண்மையைப் பேச வேண்டும் எனக் காங்கிரஸ்  முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.

சென்ற வாரம் திங்கள் அன்று கிழக்கு லடாக் எல்லைப்பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்தினரை சீனப்படைகள் தாக்கின.  இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் மரணம் அடைந்து சுமார் 70க்கும் அதிகமான வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.  சீன வீரர்கள் சுமார் 35க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகச் செய்திகள் வந்தன.   ஆனால் அதைச் சீன அரசு உறுதி செய்யவில்லை.

மத்திய அரசை இந்த தாக்குதல் தொடர்பாகக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார்.   இந்த தாக்குதல் குறித்து இந்திய அரசு எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் சீனா திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தி உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ராகுல் காந்தி தனது டிவிட்டரில், “சர்ச்சைக்குரிய அந்த இந்தியப் பகுதியை பிரதமர் சீனாவுக்கு ஒப்படைத்து விட்டாரா?  அந்த நிலப்பகுதி சீனாவுடையதா?   அப்படியானால் நமது வீரர்கள் ஏன் கொல்லப்பட்டனர்? வீரர்கள் சீன எல்லையிலா அல்லது இந்திய எல்லையிலா எங்கு கொல்லபப்ட்டன்ர்?” எனக் கேள்விகள் கேட்டிருந்தார்.

தற்போது அவர் மீண்டும் தனது டிவிட்டரில், “இந்திய எல்லையான லடாக் பகுதியில் உள்ள சீன விவகாரத்தில் இனியாவது பிரதமர் உண்மையைப் பேச வேண்டும்.  நீங்கள் உண்மையைச் சொல்ல அஞ்ச வேண்டாம்.   நீங்கள் உண்மையை தெரிவித்தால் ஒட்டு மொத்த இந்திய நாடும் உங்களுக்குத் துணை நிற்கும்” என பதிந்துள்ளார்,