டெல்லி: டெல்லியில் அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி இந்தியில் பேசியதற்கு திமுக எம்பி திருச்சி சிவா எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

நாட்டில் கொரோனா நிலவரம் குறித்து ஆலோசிக்க மக்களவை, மாநிலங்களவை கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. காணொளியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர்  மோடி, விலை குறைவான தடுப்பூசி மருந்தை பெறுவதில் இந்தியா கவனம் செலுத்துகிறது என்றார்.

சில வாரங்களில் கொரோனா மருந்து தயாராகும் என்று  வல்லுநர்கள் நம்புவதாகவும் பிரதமர் மோடி கூறினார். அவர்கள் கூறியதும், தடுப்பூசி வழங்கும் பணி இந்தியாவில் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் அனைத்து மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது பிரதமர் மோடி முழுக்க, முழுக்க இந்தியில் உரையாற்றி இருக்கிறார். அனைத்து மாநில பிரநிநிதிகள் இருக்கும் போது இந்தியில் பேசினால் ஒன்றுமே புரியவில்லை, ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று பிரதமரிடம் திருச்சி சிவா கோரிக்கை விடுத்தார்.

ஆனால் அதற்கு பிரதமர் மோடி எந்தவித பதிலையும் கூறாமல் தொடர்ந்து இந்தியிலேயே பேசி தனது உரையை முடித்துள்ளார். பிரதமர் உரை குறித்த ஆங்கில மொழி பெயர்ப்பும் எழுத்துவடிவில் கூட எந்த உறுப்பினருக்கும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.