பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒதுங்கிக் கொண்ட பிரதமர் மோடி: அமித்ஷா பதில் அளித்தார்

புதுடெல்லி:

5 ஆண்டுகளில் முதல் முறை செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற பிரதமர் மோடி, கேள்விகளை அமித்ஷாவுக்கு மடைமாற்றி விட்டார்.

மக்களவை இறுதிக் கட்டத் தேர்தல் நாளை நடைபெறுகிறது. தேர்தலை சந்திக்கும் 59 தொகுதிகளுக்கான பிரசாரம் ஓய்வடைந்த நிலையில், டெல்லியில் உள்ள பாஜ தலைமையகத்தில் பிரதமர் மோடி, பாஜ தலைவர் அமித் ஷா கூட்டாக பேட்டியளித்தனர்.

கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி, பத்திரிகையாளர்களை சந்தித்தது இதுவே முதல்முறை.
அப்போது மோடி பேசும்போது, ஐந்தாண்டுகள் ஆட்சியில் இருந்த போதிலும், பாஜ தனிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும்.

நாட்டை முன்னெடுத்து செல்ல தேர்தல் அறிக்கையில் பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. புதிய அரசு அமைந்து பொறுப்பேற்றதும் அதனை நிறைவேற்றுவதற்கான வேலைகள் தொடங்கும் என்றார்.

அதன் பிறகு பிரதமர் மோடி பத்திரிகையாளர்களின் கேள்விகள் எதையும் எதிர்க்கொள்ளவில்லை. ‘‘அமித்  ஷாவால் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தப்படுகிறது.

எனவே எந்தவொரு  கேள்வியையும் நான் எதிர்கொள்ளப் போவது கிடையாது. பாஜ.வின் விதிகளின்படி  ஒழுக்கம் பின்பற்றப்பட வேண்டும். நாங்கள் பாஜ.வின் ஒழுக்கத்துக்கு  கட்டுப்பட்ட வீரர்கள். அமித் ஷா உங்களுடைய கேள்விகளுக்கு பதில் அளிப்பார்,’’ எனக் கூறி ஒதுங்கி விட்டார்.

இதற்கிடையே, பிரதமரின் பத்திரிக்கையாளர் சந்திப்பை எதிர்கட்சிகள் கிண்டல் செய்துள்ளன.