டில்லி:

டில்லி மெட்ரோ ரெயில் திட்டத்தின் மெஜந்தா வழித்தடத்தை கிறிஸ்துமஸ் தினமான வரும் 25ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

கல்கஜி மந்திர்-தாவரவியல் பூங்கா இடையிலான டில்லி மெட்ரோ ரெயில் வழித்தடம் நொய்டா – தெற்கு டில்லி இடையிலான பயண நேரத்தை குறைக்கும். 12.64 கி.மீ., தொலைவு கொண்ட இந்த தாவரவியல் பூங்கா -ஜனாக்புரி மேற்கு (மெஜந்தா) வழித்தடத்துக்கு மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஆணையர் கடந்த மாதம் அனுமதி வழங்கினார்.

இந்த வழித்தடத்தில் டிரைவர் இல்லாத புதிய தலைமுறை ரெயில்கள் இயக்கப்படவுள்ளது. நவீன தொலை தொடர்பு ரெயில் கட்டுப்பாடு சிக்னல் தொழில்நுட்பத்துடன் இது செயல்படுத்தப்படவுள்ளது. எனினும் ஆரம்ப கட்டமாக 2 முதல் 3 ஆண்டுகள் வரை இதில் டிரைவர்கள் இருப்பார்கள். தற்போது நொய்டாவில் இருந்து தெற்கு டில்லி செல்லும் மக்கள் மந்தி ஹவுஸ் மெட்ரோ ரெயில் நிலையத்தில் நீல நிற வழித்தடத்தில் இருந்து வைலட் நிற வழித்தடத்துக்கு மாற வேண்டிய நிலை உள்ளது.

இந்த புதிய வழித்தடம் தொடங்கப்பட்டவுடன் கல்கஜி மந்திர் மெட்ரோ ரெயில் நிலையதிற்கு நேரடியாக பயணம் மேற்கொள்ள முடியும். இதன் மூலம் வைலட் நிற வழித்தடத்தில் 45 நிமிட பயண நேரம் குறையும். இந்த மெஜந்தா வழித்தடத்தில் 25 ரெயில் நிலையங்கள் உள்ளது. மெட்ரோ ரெயிலின் மஞ்சள், நீலம், வைலட் வழித்தடங்களுக்குள் மாற்றங்களை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையத்தின் 1டி முணையத்திற்கு நேரடியாக இணைப்பு கொடுக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.