பிரதமர் மோடி நாளை குஜராத் பயணம்
காந்திநகர்:
பிரதமர் மோடி நாளை (30ம் தேதி) குஜராத் பயணம் மேற்கொண்டு- பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்துக்கு நாளை வருகிறார். இங்குள்ள ஆனந்த் மாவட்டத்தில் உள்ள அமுல் பால் பண்ணை நிறுவனத்துக்கு சொந்தமான வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன சாக்லேட் தொழிற்சாலையை அவர் திறந்து வைக்கிறார். ஆனந்த் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உணவு பதடுத்தும் பயிற்சி நிலையத்தை தொடங்கி வைக்கிறார். முஜ்குவா கிராமத்தில் சூரிய மின்சக்தி கூட்டுறவு நிறுவனத்தையும் திறந்து வைக்கிறார்.
ஆனந்த், கட்ராஜ் பகுதிகளில் 2 கிளைகளுக்கான அடிக்கல்லை நாட்டுகிறார். பின்னர் அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். கச் மாவட்டம் அன்ஜார் நகரில் முன்ட்ரா இயற்கை எரிவாயு முனையம், அன்ஜார்- முன்ட்ரா எரிவாயு குழாய் திட்டம், பலன்பூர்-பாலி-பார்மர் எரிவாயு குழாய் திட்டம் ஆகியவற்றை தொடங்கி வைக்கிறார்.
ராஜ்கோட் மாவட்டத்தில் ஆல்பிரட் உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார். மாநில அரசின் பொது வீட்டு வசதி திட்டத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள 240 வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைக்கிறார்.