ஜாலியன் வாலாபாக் 100ஆண்டு நினைவு தினம்: பிரிட்டன் தூதர் நேரில் மரியாதை; மோடி டிவிட்டரில் பதிவு

அமிர்தசரஸ்:

ஜாலியன் வாலாபாக் 100ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுவதையொட்டி,  பிரிட்டன் தூதர்  பஞ்சாபில் உள்ள நினைவிடம் வந்து நேரில் மரியாதை செலுத்தினார்.

பிரதமர் மோடி டிவிட்டரில் ஜாலியான் வாலாபாக் படுகொலை குறித்து பதிவு செய்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ஜாலியன் வாலாபாக் என்னுமிடத்தில் தேச விடுதலைக் காக போராடிய  ஆயிரக்கணக்கான மக்களை சுட்டுக்கொன்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த 100 ஆண்டு நினைவு தினம் இன்று.

இதையொட்டி பிரதமர் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருப்பதவாது,

ஜாலியன் வாலாபாக் படுகொலையில் உயிரிழந்தவர்களின் தியாகம் மறக்கப்படாது ; அவர்களின் நினைவுகள், இந்தியாவை பெருமைப்படுத்துவதற்காக மேலும் எங்களை உழைக்க தூண்டுகிறது  என்று கூறி உள்ளார்.

முன்னதாக, அமிர்தசரசில் உள்ள  ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் இன்று காலை ராகுல் காந்தி  மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன் பஞ்சாப் முதல் அம்ரிந்தர் சிங், சித்து ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து, அமிர்தசரஸில் உள்ள நினைவிடத்தில் பிரிட்டன் தூதர் மரியாதை செலுத்தி னார். பிரிட்டன் தூதர் டோமினிக் ஆஸ்குய்த் மற்றும் அதிகாரிகள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரிட்டன் பிரதமர் தெரசா மே, ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் பிரிட்டிஷ் – இந்தியா வரலாற்றில் அழியா வடு என வருத்தம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.