மும்பை

தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மகாராஷ்டிர மாநிலத்தில் பணியாற்ற பிரதமர் மோடி விரும்பியதாகவும் தாம் அதை மறுத்து விட்டதாகவும் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்த கடந்த மாதம் சிக்கல் இருந்த போது  பிரதமர் மோடியை தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் சந்தித்தார்.   அப்போது இந்நிகழ்வு பரபரப்பாக பேசப்பட்டது.   இதையொட்டி பாஜக சரத்பவார் உதவியுடன் ஆட்சி அமைக்கும் எனவும் அதற்காக சரத் பவாருக்கு குடியரசுத் தலைவர் பதவி வழங்க மோடி ஒப்புதல் அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் தற்போது சிவசேனா கட்சிக் கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைத்துள்ளன.   இந்நிலையில் மராத்தி மொழி செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு சரத் பவார் அளித்த பேட்டியில், “நான் வெகுநாட்களாக பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டிருந்தேன்.  நீண்ட நாட்களுக்குப் பிறகு அந்த நேரம் ஒதுக்கப்பட்டது.

விதர்பா பகுதியில் பெய்த மழையால் விவசாயிகள் கடும் துயர் அடைந்தது குறித்து அவரிடம் தெரிவிக்க விரும்பினேன்.   விவசாயிகள் பிரச்சினை குறித்து என்னிடம் பேசிய பிரதமர் மகாராஷ்டிரா மாநிலத்தில் எங்கள் கட்சியுடன் இணைந்து பனி புரியத் தாம் விரும்புவதாகத் தெரிவித்தார்.    எங்கள் இருகட்சிகளும் இணைந்து பணி புரிவது மாநிலத்துக்கு நன்மை தரும் என அவர் யோசனை தெரிவித்தார்.

ஆனால் நான் அந்த யோசனையை நிராகரித்து விட்டேன்.  தனிப்பட்ட முறையில் எனக்கும் மோடிக்கும் நட்புறவு உள்ள போதிலும் அரசியல் ரீதியாக இணைந்து பணி புரிய முடியாது என்பதை விளக்கினேன்.   அவர் எனக்கு குடியரசுத் தலைவர்  பதவி அளிப்பதாக சொல்லவில்லை.  மாறாக எனது மகளும் மக்களவை உறுப்பினருமான சுப்ரியா சுலேவுக்கு அமைச்சர் பதவி அளிப்பதாகத் தெரிவித்தார்” எனக் கூறி உள்ளார்.