ஜனவரி 27ல் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி! மீண்டும் ‘#GoBackModi டிரென்டிங் ஆகுமா?
டில்லி:
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, ஜனவரி மாதம் 27ந்தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார். அப்போது தேர்தல் பிரசாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், அவர் சென்னை வரும்போது, ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்த மாதிரி மீண்டும் ‘#GoBackModi என்ற எதிர்ப்பு அலைகள் எழும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை ஜனவரி முதல் வாரத்தில் பிரதமர் மோடி தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
தேர்தலையொட்டி, நாடு முழுவதும்100 பிரசாரங்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்த பாஜக. திட்டம் வகுத்து உள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஜனவரி 27ந்தேதி தேர்தல் பிரசாரம் செய்ய மோடி சென்னை வருகிறார்.
ஏற்கனவே காவிரி விவகாரத்தில் உச்சநீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்தாமல் காலம் கடத்தியதை கண்டித்து, கடந்த ஏப்ரல் 12ந்தேதி சென்னை வந்த பிரதமர் மோடிக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து, கருப்பு கொடி ஆர்ப்பாட்டம், வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, டிவிட்டர் வலைதளத்தில் #GoBackModi ஹாஷ்டேக் டிரென்டிங்கானது.
இந்த நிலையில், சமீப காலமாக மத்திய அரசு தமிழக மக்களுக்கு எதிரான நிலையையே எடுத்து வருகிறது. மேகதாது அணை, ஸ்டெர்லைட் விவகாரம் போன்ற மக்கள் விரோத செயல்களுக்க துணைபோகிறது.
இது தமிழக மக்களிடையே கடும் அதிருப்திகளை உருவாக்கி வரும் நிலையில், அடுத்த ஆண்டு தமிழகம் வர உள்ள மோடிக்கு எதிராக மீண்டும் மக்கள் கொதித்தெழ வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அதன் காரணமாக, மீண்டும் #GoBackModi என்ற கண்டன வாசகம் டிரென்டிங்காக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.