டெல்லி: முன்னாள் கேப்டன் தோனி, புதிய இந்தியாவின் அடையாளம் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டி உள்ளார்.

தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டார். அவருடன் சின்ன தல என்றழைக்கப்படும் ரெய்னாவும் தமது ஓய்வை அறிவிக்க ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியும், சோகமும் அடைந்தனர்.

தோனியின் ஓய்வுக்கால வாழ்க்கை இனிதாக அமைய அனைத்து தரப்பினரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். இந் நிலையில் பிரதர் மோடியும், தோனியை பாராட்டி கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அவர் தமது கடிதத்தில் கூறி இருப்பதாவது:

உங்கள் அசைக்க முடியாத பாணியில், முழு நாட்டிற்கும் ஒரு உணர்ச்சிபூர்வமான கலந்துரையாடல் புள்ளியாக மாறும் வகையில் வீடியோவை பகிர்ந்துள்ளீர்கள். 130 கோடி இந்தியர்கள் ஏமாற்றமடைந்தனர், ஆனால் நீங்கள் இந்திய கிரிக்கெட்டுக்காக செய்த அனைத்திற்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருந்தோம் என்று கூறி உள்ளார்.

அவர் மேலும் தமது கடிதத்தில் கூறி இருப்பதாவது: ஓய்வை அறிவிப்பை கேட்டு ஏமாற்றம் அடைந்தேன். இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் தோனியும் ஒருவர்.  தலைசிறந்த பேட்ஸ்மென், கேப்டன், விக்கெட் கீப்பர் என வரலாறை படைத்ததை நாடே பெருமை கொள்கிறது.

2011ம் ஆண்டு உலக கோப்பை இறுதி போட்டியில் உங்களின் அந்த சிக்சர் இந்தியா மறக்காது. பல கோடி இளைஞர்களின் உத்வேகமான உங்களை ஒரு கிரிக்கெட் வீரர் என்ற அடிப்படையில் சுருக்கிவிட முடியாது. கிரிக்கெட்டில் இளைஞர்களுக்கு வாய்ப்பு தந்து, சகாப்தம் படைத்துள்ளீர்கள். சக வீரர்கள் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்க, தமது குழந்தையுடன் நீங்கள் விளையாடிக் கொண்டிருந்த புகைப்படம் மிகவும் என்னை கவர்ந்த ஒன்று.