மோசமான சீதோஷ்ண நிலையில் விமானப் படையை தாக்குதல் நடத்த அனுப்புவதா? : மெஹ்பூபா கேள்வி

ஸ்ரீநகர்:

மேகங்கள் சூழ்ந்திருந்தபோது பால்கோட்டில் விமான தாக்குதல் நடத்தியதால், பாகிஸ்தான் ராடாரால் கண்டுபிடிக்க முடியவில்லை என பிரதமர் மோடி பேசியது, வலி மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதாக முன்னாள் காஷ்மீர் முதல்வர் மெஹ்பூபா முப்தி கூறியுள்ளார்.


இது குறித்து அவர் ட்விட்டர் பதிவில், ” சீதோஷ்ண நிலை மோசமாக இருந்தபோது மேகமூட்டம் இருந்ததை பயன்படுத்தி பால்கோட்டில் தாக்குதல் நடத்த இந்திய விமானப் படைக்கு உத்தரவிட்டேன். இதனால்தான் பாகிஸ்தான் ராடாரால் அதனை கண்டுபிடிக்க முடியவில்லை” என பிரதமர் மோடி பேசியிருப்பது வலி மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

பால்கோட்டில் திட்டமிட்ட இலக்கை தாக்கவில்லை என்பதில் எந்த ரகசியமும் இல்லை.
சீதோஷ்ண நிலை மோசமாக இருக்கிறது என ஆலோசனை கூறப்பட்டும், அதையும் மீறி இந்திய விமானப் படையை பால்கோட்டுக்கு அனுப்பியது வேதனை அளிக்கிறது.

மீண்டும் வெற்றி பெற எதையாவது செய்ய வேண்டும் என்று முனைப்போடு இருக்கிறது பாஜக. இதற்காக பாதுகாப்புப் படைகளை பயன்படுத்தாதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மாநாட்டு கட்சியின் துணை தலைவர் ஓமர் அப்துல்லா தமது ட்விட்டர் பதிவில், எதிர்காலத்தில் மேகமூட்டம் இருக்கும் போது விமான தாக்குதல் நடத்தினால் ராடாரால் கண்டுபிடிக்க முடியாது என்ற முக்கிய நுட்பமான விசயத்தை சொல்லியிருக்கிறார் என்று கிண்டல் செய்துள்ளார்.