Random image

ராஜஸ்தான்: மோடி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க கருப்பு நிற ஆடை அணிந்தவர்களுக்கு தடை

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநில பாஜக ஆட்சியில் 2.5 லட்சம் பேர் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்றதாக அறிவி க்கப்பட்டது. இதையடுத்து இந்த பயனாளிகள் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் இன்று ஜெய்ப்பூரில் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகளை மாநில பாஜக முதல்வர் வசுந்தரா ராஜே மேற்கொண்டுள்ளார்.

பிரதமர் வருகையை முன்னிட்டு ஜெய்ப்பூரில் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கூட்டம் நடக்கும் அமருதன் கா பார்க் மைதானம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரகசிய கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கூட்டத்தில் கலந்துகொள்ள 33 மாவட்டங்களில் இருந்தும் ஆட்களை அழைத்து வரப்பட்டுள்ளனர். 3 லட்சம் பேரை திரட்ட வேண்டும் என்ற இலக்குடன் அந்த பணி கடந்த 2 நாட்களாக நடந்தது. 5,600 பஸ்கள் மூலம் ஜெய்ப்பூருக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இதற்காக மாநில அரசு 7 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.

இதற்கிடையில் துங்கர்பூரில் இருந்து ஒரு குழுவினர் 800 கி.மீ. பயணம் மேற்கொண்டு கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்தனர். அவர்கள் கருப்பு மேல் சட்டை மற்றும் கருப்பு டி சர்ட்டுகள் அணிந்து வந்திருந்தனர். அவர்கள் கூட்ட மைதானத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. கருப்பு ஆடைகளை அகற்றினால் தான் அனுமதிக்கப்படும் என்று பாதுகாப்பு அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.

இதேபோல் அதே பகுதியில் ஜெய்ப்பூர் கவுசல் விகாஸ் யோஜனா மாணவர்கள் 60 பேரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். அதில் ஒரு மாணவர் கருப்பு நிற உள் பனியன் அணிந்திருந்தது தான் காரணம்.

மேலும், கூட்ட மைதானத்தில் போதுமான கழிப்பிட வசதிகள் செய்யப்படவில்லை. அரசு திட்டங்களை புகழந்து பேச வந்த பயனாளிகள் பலர் திறந்த வெளி கழிப்பிடங்களை தான் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

கடந்த மார்ச் மாதம் நடந்த ஒரு கூட்டத்தில் முதல்வர் வசுந்தரா ராஜே பேச தொடங்கியபோது கருப்பு கொடிகளும், பேனர்களும் காட்டப்பட்டன. இதன் காரணமாக தான் இந்த கூட்டத்தில் கருப்பு நிறத்துக்கு கெடுபிடி காட்டப்பட்டுள்ளது.